×

கொரோனா வைரஸ் எதிரொலி: மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு!

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். ஓரிரு நாட்களில் விசா முடிவடைய கூடிய சூழல் இருக்கக்கூடிய நிலையில், முகாம்களில் அடைக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் மலேசியாவும் ஒன்று. எனவே மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை என்பது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் இந்தியா செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் தான் பிலிப்பைன்ஸில் மருத்துவக் கல்லூரி பயில சென்ற மாணவர்கள் 200 பேர் மற்றும் பயணிகள் 100 பேர் என மொத்தம் 300 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வந்தனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டதன் காரணமாக அவர்கள் இரண்டு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். அடுத்தகட்டமாக தற்போது மேலும் 200 பேர், அதாவது இந்தியாவை சேர்ந்தவர்கள் அதே கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் தவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் தமிழர்கள் தான் அதிகளவில் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் தவிக்கும் 100 பேர் அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள், இதர 100 பேர் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றவர்கள். இவர்களுக்கு தற்போது புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. நேரடி விமான சேவை இல்லாத காரணமாக சிங்கப்பூரிலுள்ள சாங்கி நகரிலிருந்து திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் மூலம் வர அனுமதி பெற்றிருந்தனர். அதற்கான டிக்கெட்டை எடுத்துவிட்டனர். ஆனால் இவர்களுக்கு விமானத்தில் ஏற போர்டிங் பாஸ் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களையே, இந்தியாவுக்கு வர வேண்டாம் என இந்திய அரசு கூறியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் சுற்றுலா சென்றவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

Tags : Tamils ,Malaysia , Corona, echo, malociya, tourism, Tamils, helplessness
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்