×

விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு

*  கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளும் தள்ளி வைப்பு

லண்டன்: விளையாட்டு உலகை ‘கொரோனா’ மொத்தமாக முடக்கிப் போட்டு விட்டது. மே மாதம் பாரிசில் நடைபெற இருந்த கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள், வரலாற்றிலேயே முதன் முறையாக செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டனர். உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலால், ஒட்டுமொத்த விளையாட்டு உலகும் உறைந்து நிற்கிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளை தள்ளி வைப்பதுதான் சரியான முடிவு என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டாக ஆலோசனை செய்து அறிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் மே மாதம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

தற்போது செப்டம்பருக்கு இப்போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இடையே ஜூன், ஜூலையில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், அதற்கான அட்டவணையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பரில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற வேண்டும். ஆனால் செப்டம்பரில் பிரெஞ்ச் ஓபன் என அறிவிக்கப்பட்டுள்ளதால், யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நவம்பர் அல்லது டிசம்பருக்கு தள்ளி வைக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு கோபா, யூரோ கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 24ம் தேதி துவங்க உள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை குறிப்பிட்ட அட்டவணையில் நடத்தாவிட்டால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என்பதால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியே தீருவோம் என ஜப்பான் பிடிவாதமாக அறிவித்துள்ளது.

ஆனால் சர்வதேச அளவிலான தடகள விளையாட்டு வீரர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே, ஒலிம்பிக் நடைபெறுமா என்பதை கூற முடியும். வீரர்களின் கைகளில்தான் ஒலிம்பிக் உள்ளது. 50 சதவீத அளவிலான வீரர்கள் வரவில்லை என்றால், ஒலிம்பிக் நடத்துவதில் அர்த்தமில்லை என்று ஒலிம்பிக் கழக நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்பெயினின் 21 வயதேயான கால்பந்து விளையாட்டின் இளம் பயிற்சியாளரை கொரோனா காவு வாங்கி விட்டது. இதனால் உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களும் கடும் பீதியில் உள்ளனர். விளையாட்டு உலகமும் முடங்கி விட்டது.

Tags : September World Corruption: French Open , Corona, French Open, deferred
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...