×

70 அடி ஆழ கிணற்றில் குஞ்சுகளுடன் தவித்த ஆந்தை மீட்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே 70 அடி ஆழ கிணற்றில் 4 குஞ்சுகளுடன் இருந்த ஆந்தை மீட்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் அருகே பருத்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த வளாகத்தில் 70 அடி ஆழம் கிணறு உள்ளது. இதில் சுமார் 40 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது. இடையில் படிக்கட்டு அருகே உள்ள மின் மோட்டார் அரங்கில் இருந்து பாம்பு இருப்பதுபோல் புஸ் புஸ் என கடந்த இரு தினங்களாக சத்தம் கேட்டுள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் திருவில்லிபுத்தூரில் உள்ள தீயணைப்பு துறை அதிகாரி ஜெயராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறை அதிகாரி ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். மின்மோட்டார் அறையை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்து புஸ் புஸ் என மீண்டும் சத்தம் வந்தது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் கருவியை எடுத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பெரிய ஆந்தை நான்கு குஞ்சுகளுடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து ஆந்தையையும் குஞ்சுகளையும் பத்திரமாக மீட்டு வேளாண்மை துறையினரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு துறையை சேர்ந்த ஒருவர் கூறும்போது, குஞ்சுகள் நன்கு வளர்ந்து விட்டது. இப்படியே விட்டால் ஒரு சில தினங்களில் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருக்கும். எனவே குஞ்சுகளையும் தாய் பறவையான ஆந்தையையும் மீட்டு வேளாண்மைத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டோம் என தெரிவித்தார்.

Tags : Owl
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை