×

டீ டம்ளர்களை வெந்நீர் மற்றும் சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும்.. கொரோனா பரவலை தடுக்க டீக்கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை புதிய கட்டுப்பாடுகள்

சென்னை : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் தற்போதுதான் கொரோனா குறித்த அச்சம் எழ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இரண்டு வாரம் முன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. வெளிநாடு சென்று திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.ஆனால் இவருக்கு உடனே மூன்று நாட்களில் வைரஸ் தாக்குதல் சரி செய்யப்பட்டது.

அதன்பின் தற்போது இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. பெரும்பாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தவிர்க்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை டீக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை புதிய கட்டுப்பாடு விதித்தது. டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும், டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை அதீத தூய்மையாக வைத்திருக்க வேண்டும், டீக்கடைகளில் உள்ள மேஜை, சேர் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் கிருமி நாசனி போட்டு சுத்தம் செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு, கை கழுவும் சோப்பு கொடுக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதேபோல உணவகங்களுக்கு வரக்கூடியவர்களுக்கு கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன ? என்ன செய்யவேண்டும் ? எப்படி கைகளை வேண்டும் ? எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் ? என்று அறிவுறுத்த வேண்டும் என உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Corona ,field , Corona, Virus, Food, Department of Defense, Tea Store
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...