×

இடம் கிடைப்பதில் சிக்கல் ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வலியுறுத்தல்

மானாமதுரை: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 5 மணிக்கு இயக்கப்படும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் அனைத்தும் ராமநாதபுரத்திலேயே நிரம்பி விடுகிறது. இதனால் மானாமதுரையைச் சேர்ந்த பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. எனவே கூடுதல் பெட்டிகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லைகளுக்கு அருகில் இருப்பதால், மூன்று மாவட்ட மக்களும் மானாமதுரைக்கு வருகின்றனர்.

இங்கிருந்து மதுரை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்சி மார்க்கத்திற்கு ரயில் பாதைகள் பிரிந்து செல்கின்றன. தென்மாவட்டங்களுக்கு வரும் பெரும்பாலான ரயில்கள் மானாமதுரை சந்திப்பை கடந்துதான் செல்ல வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக செல்லும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தலா நான்கு முன்பதிவில்லாத பெட்டிகள் உள்ளன. இஞ்சினில் முன்பகுதியில் இரண்டு பெட்டிகளும், கார்டு பெட்டிக்கு முன்பகுதியில் இரண்டு பெட்டிகளும் இணைக்கப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 5 மணிக்கு இயக்கப்படும் போட்மெயில் ரயிலில் இஞ்சினுக்கு அடுத்த பெட்டி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்ற ஒரு பெட்டியில் ஒரு பகுதி ரயில்வேமெயில் சர்வீஸ் எனப்படும் தபால் அலுவலகமாகவும் உள்ளது. முன்பதிவில்லாத ஒருபெட்டியில் பாதியில் 42 பயணிகள் மட்டுமே அமர்ந்து செல்லுகின்றனர். பின்புறம் உள்ள இரண்டு பெட்டிகளில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் பரமக்குடி பயணிகள் அமர்ந்துவிட்டால் மானாமதுரை, சிவகங்கை காரைக்குடி பயணிகள் சென்னை வரை கழிப்பறையில் அமர்ந்து செல்லவேண்டியுள்ளது.

எனவே இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகளை இணைக்க மத்திய, மாநில அரசில் பதவியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை செய்யவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பயணி வரதராஜன் கூறுகையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் தலா நான்கு முன்பதிவில்லாத பெட்டிகளில் இரண்டு பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சரக்கு பெட்டிகளாக இருப்பதால் மீதம் இருக்கும் இரண்டு பெட்டிகளில் மட்டுமே பயணிகள் செல்ல முடிகிறது.

ராமேஸ்வரம், ராமநாதபுரம் ஸ்டேசன்களில் இந்த பெட்டிகள் நிரம்பி விடுவதால் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடியில் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறும் பயணிகள் கழிப்பறை அருகே அமர்ந்து சென்னை செல்ல வேண்டியுள்ளது. எனவே மதுரை கோட்ட நிர்வாகமும், மத்திய,மாநில அரசு மக்கள் பிரதிநிதிகளும் கூடுதல் பெட்டிகளை ஒதுக்க பரிந்துரை செய்யவேண்டும் என்றார்.

Tags : Rameshwaram ,Rameswaram Railway , Rameswaram Railway
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல்...