×

சேலத்தில் அரிய வகை ‘பூங்குருவி’ கண்டுபிடிப்பு: இமயமலையிலிருந்து வந்திருப்பதாக தகவல்

சேலம்: பறவைகள் தங்கள் வசித்து வரும் பகுதியில் நிலவும் கடும் குளிர், புயல்காற்று போன்ற  அசாதாரண சூழ்நிலைகளில், உணவிற்காக ஒரு இடத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு மற்றொரு இடத்திற்கு செல்லும். இந்த செயல்பாடு வலசை போதல் என அழைக்கப்படுகிறது. அதுபோன்று, இமயமலை பகுதியை வாழிடமாக கொண்ட அரிய வகை டிக்கெல் பூங்குருவி ஒன்று, சேலம் அடுத்த வாழப்பாடி பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழப்பாடி அடுத்த ஜம்பூத்துமலை கிராமத்தில் உள்ள ஓடை பகுதியில் நேற்று முன்தினம் இந்த டிக்கெல் பூங்குருவி இருந்துள்ளது.

அப்பகுதியில் வழக்கமாக உள்ளதைவிட, வித்தியாசமான பறவையாக இருந்ததால், பறவை ஆர்வலரும், ஜம்பூத்துமலை தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான கலைச்செல்வன், உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து, அதுகுறித்த விவரங்களை தேடினார்.  அதில், வித்தியாசமாக இருந்தது, இமயமலை பகுதியில் இருக்கக்கூடிய டிக்கெல் பூங்குருவி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வன் கூறுகையில், ‘‘பறவை மீது ஆர்வம் கொண்டுள்ளதால், ஓய்வு நேரங்களில் சுற்றுப்புறத்திலுள்ள பறவைகளைப் பார்த்து, அவற்றின் இனம் கண்டறிந்து பறவைகளுக்கான தனி இணையதளத்தில் (E-Bird) பதிவு செய்வேன்.

தொடர்ந்து, அதுகுறித்து மாணவர்களுக்கும் விளக்கம் அளிப்பேன். அந்த வகையில், இமயமலையில் இருந்து தென்மாநிலங்களுக்கு வருகை தரும் டிக்கெல் பூங்குருவி ஜம்பூத்துமலை ஓடையில் இருந்தது. இமயமலையை வாழிடமாகக் கொண்ட இவை, அங்கு தற்போது கடுங்குளிர் நிலவுவதால் உணவு தேடி இந்தியாவின் தென்பகுதிக்கு வந்துள்ளது. சிட்டுக்குருவியின் அளவுடைய இந்த டிக்கெல் பூங்குருவி, பழுப்பு நிற அலகு, வெளிறிய மஞ்சள் நிற கால்களைக் கொண்டவை. ஆண் பறவை வெளிர் சாம்பல் நிறத்திலும், பெண்பறவை வெளிர் பழுப்பு நிறத்திலும் காணப்படும். பெண் பறவையின்  மார்புப் பகுதியில் அடர் பழுப்பு நிறமும், வரிகளும் இருக்கும். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, தற்போது வாழப்பாடியில் கண்டறியப்பட்டுள்ளது, பெண் பறவை என முடிவு செய்யலாம்,’’ என்றார்.

தமிழகத்தில் 11வது முறை கண்டுபிடிப்பு

இதுகுறித்து சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த பறவைகள் ஆய்வாளர் கணேஷ்வர் கூறுகையில், ‘‘மறைந்த பிரிட்டிஷ் பறவையியலாளர் சாமுவேல் ரிச்சர்ட் டிக்கெல்’ என்பவரின் நினைவாக அவர் பெயர் இப்பறவைக்கு சூட்டப்பட்டுள்ளது. டிக்கெல் மலர்க்கொத்தி, டிக்கெல் நீல ஈப்பிடிப்பான், டிக்கெல் பழுப்பு இருவாச்சி என்பவை அவர் பெயரில் அமைந்த சில பறவைகளாகும். இந்த டிக்கெல் பூங்குருவி, தமிழகத்தில் 11வது முறையாகவும், சேலம் மற்றும் ஒட்டுமொத்த கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 2வது முறையாகவும் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஏப்ரலில், ஏற்காடு மலையில் முதன்முறையாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது,’’ என்றார்.

Tags : Salem ,Himalayas Punkuruvi , Punkuruvi
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...