பரமத்திவேலூர் அருகே நோய் தாக்கி இறந்ததை அழிக்க சாலையோரம் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோழிகள்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே தொற்றுநோய் பாதிப்பால் பண்ணையில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. இந்த கோழிகளை புதைக்காமல், தூக்கி வந்து சாலையோரம் மற்றும் குட்டையில் கொட்டி விட்டு சென்றதால், நோய் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில், கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதித்து கோழிகள் இறந்தன. தவிர, கொரோனா வைரஸ் பீதியால், தமிழகத்தில் கறிக்கோழி மற்றும் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள இருக்கூர் ஊராட்சி பஞ்சப்பாளையம், செஞ்சுடையாம்பாளையம், ரங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒவ்வொரு கோழிப்பண்ணைகளிலும், சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முட்டைக்கோழிகள் வளர்த்து வருகின்றனர். இந்த கோழிப்பண்ணைகளில் நோய் தாக்குதலால் இறந்து போகும் கோழிகள், கொரோனா வைரஸ் பீதியால் விற்பனையாகாமல் தேங்கியுள்ள முட்டைகள் ஆகியவற்றை, கோழிப்பண்ணை வளாகத்துக்குள்ளேயே குழி அமைத்து, அதில் கொட்டி எரிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு கோழிப் பண்ணையாளர் மட்டும், தனது பண்ணையில் இறந்து போகும் கோழிகள் மற்றும் முட்டைகளை,  வாகனங்களில் எடுத்து வந்து சாலையோரம், அவருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டி விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நாள்தோறும் சுமார் 500 இறந்த கோழிகளை கொட்டுவதால், செஞ்சுடையாம்பாளையம், பஞ்சபாளையம், ரங்கம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பாதித்து இறந்த கோழிகளை, சுற்றுப்பகுதியில் இருந்து வரும் ஏராளமான நாய்கள், தூக்கிச்சென்று குடியிருப்பு பகுதியில் வைத்து சாப்பிடுகிறது. காகம், பருந்து உள்ளிட்ட பறவைகளும் இறந்து அழுகிய கோழிகளை தூக்கிச் செல்கின்றன. இவை வீட்டின் கூரைகள் மீது அமர்ந்து சாப்பிட்டு விட்டு, எச்சங்களை அப்படியே போட்டு செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அதேபோல், நாய்கள் இறந்த கோழிகளை தூக்கிச்சென்று ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டிகள், விவசாய நிலங்களில் போட்டு விட்டு செல்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்குள், சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பல முறை தகவல்  தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்த கோழிகளை முறைப்படி புதைக்காததால் தொற்று நோயும், அதை சாப்பிடும் நாய்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, இறந்த கோழிகளை சாலையோரம் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோழிகள், முட்டைகளை உரிய முறைப்படி அகற்ற உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: