×

இடைத்தேர்தல் நடக்கும் வரை காங்கிரஸ் ஆட்சியில் நீடிப்பதால் வானம் இடிந்து விழுந்து விடாது: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வாதம்

புதுடெல்லி: ‘மத்தியப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடக்கும் வரை காங்கிரஸ் ஆட்சியில் நீடிப்பதால் வானம் இடிந்து விழுந்து விடாது,’ என உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வாதாடியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, கட்சில் இருந்து வெளியேறி பாஜ.வில் இணைந்தார். இதனை தொடர்ந்து அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால்,  திங்களன்று அவை  கூடியவுடன் கொரோனா அச்சுறுத்தலை காரணம் காட்டி, அவையை மார்ச் 26ம் தேதி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்நிலையில், பாஜ மூத்த  தலைவரும், இம்மாநில முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானும், 9 எம்எல்ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘பெரும்பான்மை இல்லாத அரசு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்கக் கூடாது, உடனடியாக மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியுள்ளனர்.

இந்த மனு, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ், ‘‘காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் விமானம் மூலமாக அழைத்து செல்லப்பட்டு பாஜ.வால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தங்கள் விருப்பத்தின்படி இதுபோன்று  நடக்கவில்லை. நிர்பந்தம், வற்புறுத்தலின் பேரில்தான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் அல்லது சபாநாயகருக்கு இரவில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு ஆளுநருக்கு உரிமையில்லை. காலியான  தொகுதிகள் நிரப்பப்படுவதற்கான இடைத்தேர்தல் நடக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும். காங்கிரஸ் அரசு  இடைத்தேர்தல் வரை ஆட்சியில் நீடிப்பதால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடப் போவதில்லை. சிவராஜ் சிங்சவுகானின் அரசானது மக்கள் மீது அதிகாரத்தை செலுத்த க்கூடாது. மறுதேர்தலை நடத்துவோம். அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம். நீங்கள் அதனை  வடிவமையுங்கள்.  நீங்கள் (பாஜ) தான் சதியை உருவாக்கினீர்கள் என நான் குற்றம்சாட்டுகிறேன்,” என வாதாடினார்.
 
இதனை தொடர்ந்து, சிங் சவுகான்  தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘காங்கிரஸ் கட்சியானது 1975ம் ஆண்டு எமர்ஜென்சியை  கொண்டு வந்ததன் மூலமாக ஜனநாயகத்தை படுகொலை செய்தது. ஆனால்,  தற்போது சட்டமேதை அம்பேத்கரின் உயர்ந்த லட்சியங்கள் குறித்து பேசுகிறது. 22 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்ததில் 6 எம்எல்ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை இழந்த நிலையில்,  ஒரு நாள்  கூட காங்கிரஸ் அரசு இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஆட்சி செய்வதற்கான பெரும்பான்மையை இழந்த ஒருவர், 6 மாதங்கள் ஆட்சியை தொடர விரும்புவதும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக  இடைத்தேர்தல் நடத்தக் கோருவதும் இதுவரை கேள்விப்படாத ஒன்று. சூழ்ச்சி மற்றும் வஞ்சகம் மூலமாக கமல்நாத் அரசு ஆட்சியில் நீடிக்க விரும்புகின்றது,”  என்றார்.
 
எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், ‘‘எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் உரிமையானது அரசியலமைப்புக்குட்பட்டது. அனைத்து எம்எல்ஏக்களும் அவர்களது விருப்பத்தின்பேரில் தான் ராஜினாமா செய்துள்ளனர்,’’ என்றார். அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரையும், நீதிபதியின் அறையில் ஆஜர்படுத்துவது அல்லது பதிவாளர் ஜெனரலை அனுப்பி வைக்க கோரிய வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். மேலும், ‘சம்பந்தப்பட்ட எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு செல்லலாம், செல்லாமல் இருக்கலாம் ஆனால், அவர்களை கைதிகளை போல நடத்துவது ஏற்புடையது அல்ல,’’ என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை இன்று காலைக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டது

Tags : sky ,Congress ,by-election ,Supreme Court , By-election, Congress, Supreme Court, argument
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...