×

கோதாவரி-காவிரி இணைப்பு திட்ட பேச்சுவார்த்தை: தலைமை செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: கோதாவரி ஆற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் நீரை  பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணையாறு-பாலாறு-காவிரி இணைப்பு  திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை 60 ஆயிரம் கோடியில் செயல்படுத்துவதன் மூலம் 900 டிஎம்சி நீரை திருப்பி  விட முடியும். ஆனால், இந்த திட்டத்தின் படி குறைந்த பட்சம் 300 டிஎம்சி நீர் வரை திருப்பி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு தேசிய நீர்  மேம்பாட்டு முகமை சார்பில் அறிக்கை தயார் செய்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழகத்துக்கு ஒப்புதல் கேட்டு அனுப்பி வைத்தது. தமிழக அரசு  சார்பில் இந்த திட்டத்தில் மாற்றும் கொண்டு வரும் வகையில் காவிரி கல்லணைக்கு பதிலாக கட்டளை கதவணையில் இணைக்க வேண்டும் என்றும்,  தமிழகத்துக்கு 200 டிஎம்சி நீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பதில் அளித்துள்ளது.

அதே நேரத்தில் ஆந்திரா, தெலங்கானா இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில்  அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்  ஆகியோரை சந்தித்து இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொண்டனர். இதற்கு, அந்த மாநில முதல்வர்கள்  சார்பில் இந்த திட்டத்தை கொண்டு வர ஒத்துழைப்பு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

மேலும், இந்த திட்டம் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் வகையில் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் உறுப்பினர் செயலாளர்  நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் உட்பட 5 பேர்  கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவினர் ஆந்திரா, தெலங்கானா நீர்வளப்பிரிவு அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டம்  குறித்து பேச்சுவார்த்தை நடத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Godavari ,Cauvery ,merger project talks ,committee ,chief secretary ,Negotiator , Godavari-Kaviri, Negotiator, Chief Secretary, Committee
× RELATED இலவச மின்சாரத்தை ரத்து செய்யும்...