×

அமெரிக்க துணை தூதரகம் அருகே வெடிகுண்டு வீசி சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜியை கொல்ல திட்டம் வகுத்தது எப்படி?: கைதான 7 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை: முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: அமெரிக்க துணை தூதரகம் அருகே, கார் மீது வெடிகுண்டு வீசி ரவுடிகளை கொல்ல முயன்ற விவகாரத்தில், ரவுடி சம்போ செந்தில் ஆலோசனைப்படியே திட்டத்தை செயல்படுத்தினோம் என்றும், ஆனால் திட்டம் தோல்வியடைந்ததாகவும் கைதான முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே கடந்த 3ம் தேதி சென்னை தாதாக்களான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி வந்த கார் மீது வெடி குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் நூலிழையில் இருவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அப்போது, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் மகேஷ், நண்பருடன் சேர்ந்து குண்டு வீசியது தெரிந்தது. தனிப்படை போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அவர்களை கைது செய்தனர். இந்த வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் நகர், பர்மா காலனியை சேர்ந்த கம்ரூதின் (29), ஜான்சன், ராஜசேகர், பிரசாந்த் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி சரணடைந்தனர். மேலும், மாங்கா சதீஷ், செல்வா, ஹரிஷ் ஆகியோர் 6ம் தேதி தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் 7 பேரையும் தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது, தாதாக்கள் மீது வெடிகுண்டு வீச மூளையாக செயல்பட்ட புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கம்ரூதின் (29) அளித்த வாக்குமூலம் வருமாறு:
நான் பெற்றோருடன் புதுவண்ணாரப்பேட்டையில் வசிக்கிறேன். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உள்ளனர். நாங்கள் பர்மாவில் இருந்து அகதிகளாக வந்தவர்கள். நான் 8ம் வகுப்பு வரையே படித்து விட்டு மிண்டில் ஒரு மெக்கானிக் செட்டில் 5 ஆண்டுகளாக வேலை செய்தேன். எங்கள் ஏரியா சுனாமி குடியிருப்பில் உள்ள ஜீவா அண்ணனுடன் படகில் கடலுக்கு போறது, மீன் விக்கிற வேலை பார்த்தேன். ஜீவா அண்ணனை சுத்தி எப்பவும் பசங்க இருப்பாங்க. அதேபோல கீரைத்தோட்டத்து பசங்களுக்கு சப்போட்டா ரவீந்திரன்னு ஒருத்தர் இருப்பார். அவர், காக்கா தோப்பு பாலாஜியோட நண்பர்.

கடந்த 2017ல் ஏரியா சண்டையில் ரவீந்திரன் தூண்டுதலின்பேரில் அண்ணன் ஜீவாவை கொலை செஞ்சுட்டாங்க. இதனால் அவர்கூட இருந்த நான், ஜான்சன், பிரசாந்த், ராஜசேகர் மற்றும் நண்பர்கள் எப்படியாவது ரவீந்திரனை மட்ட பண்ண முடிவு செய்தோம். அந்த நேரத்தில் ஜான்சன் ஜெயிலில் இருந்தான்.

ஒருவர் மூலமாக சம்போ செந்தில்  போன் பண்ணி நீ, ரவீந்திரனை மட்ட பண்ணு, நான் உதவி பன்றேனு சொன்னார். சம்போ செந்தில் அண்ணனும், நானும் திட்டம் போட்டு ரவீந்திரனை திருப்போரூர் பஸ் ஸ்டாண்டில் வைத்து போட்டோம். இதனால் சிறைக்கு சென்று வந்தேன். ஜெயிலில் மாங்கா சதீஷூடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ரவீந்திரன் நண்பர் காக்கா தோப்பு பாலாஜி என்னை மட்ட பண்ணனும்னு இரண்டு மூன்று தடவை ட்ரை பண்ணினார். இதனால் திருப்போரூர் வழக்கிற்கு உதவிய ஒருவர் மூலம் சம்போ செந்திலிடம் உதவி கேட்டேன். அவர், காக்கா தோப்பு பாலாஜிக்கும், எனக்கும் ஏற்கனவே பிரச்னை இருக்கு. சிடி மணியும், காக்கா தோப்பு பாலாஜியும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க. அவுங்க ஒண்ணா மாட்டுறப்ப போடணும் அப்படினு சொன்னாரு.

மேலும், சம்போ செந்தில், நீ அவுங்கள போடு, நான் உனக்கு உதவி பண்றேனு சொன்னாரு. அவருக்கு தெரிந்த காசிமேட்டை சேர்ந்த திவாகர் மற்றும் வேறொரு நபர் மூலமாக நாட்டு வெடிகுண்டு வாங்கிக் கொடுத்தார். அவுங்க ஆளுக மூலமா மறைமுகமாக உதவி பண்ணுனார். இது சம்மந்தமா ஏற்கனவே

ஜெயில பழக்கமா இருந்த மாங்கா சதீஷிடம் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணியையும் போடுற திட்டம் பற்றி சொன்னேன். அப்ப, மாங்கா சதீஷ் அவனது நண்பர்களான தமிழ்செல்வன் மற்றும் ஹரிஷ் ஆகியோரை கூட்டிட்டு வந்தார். ஏற்கனவே ஜீவா அண்ணன்கிட்ட மிகவும் விசுவாசமாக இருந்த பிரசாந்த், ஜான்சன், ராஜசேகரும் வந்தார்கள். செல்வா அவனது  பெரியம்மா வீட்டிற்கு அருகில் இருந்த மகேஷ் மற்றும் 17 வயது சிறுவன் என இரண்டு பேரை ஏற்பாடு பண்ணி கொண்டு வந்தான்.

திட்டம் போட்டபடி கடந்த 3ம் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள விரைவு நீதிமன்றத்திற்கு காக்கா தோப்பு பாலாஜி வருவதாக கேள்விப்பட்டேன்.
அதன்படி, கார் உள்ளே இருக்கும் சிடி மணியையும், காக்கா தோப்பு பாலாஜியையும் எப்படி வெட்டனுங்கிற பிளானை சொன்னேன். பிறகு அண்ணா சாலையில் வந்தபோது, என் வண்டியில் பின்னால் இருந்த பிரசாந்த் எதிர்பக்கத்தில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். அது காரில் படாமல் கார் ஷோரூம் முன்னே ரோட்டில் விழுந்து வெடித்தது.

சுதாரித்துக்கொண்ட கார் டிரைவர் காரை ஜிஎன் செட்டி சாலை வழியாக வேகமாக ஓட்டினார். ஜான்சனும் மாங்கா சதீசும், மகேஷ் மற்றும் 17 வயது சிறுவனும் காரை பின் தொடர்ந்தனர். நான் வேகத்தை குறைக்காமல் அண்ணா சாலையின் நேர் வழியில் சென்றேன். மாங்கா சதீசுக்கு போன் செய்து, திட்டமிட்டபடி எண்ணூர் அருகில் உள்ள தாழங்குப்பத்திற்கு வர சொன்னேன். அங்கு அனைவரும் வந்தனர். பிறகு புதுச்சேரி செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம். அப்போது சதீஷ் வீட்டிற்கு போவதாக கூறிவிட்டான். செல்வாவும் தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிசென்றுவிட்டார். நான் மற்றும் ஹரிஷ் வந்த வண்டியை பீச் ரயில்வே ஸ்டேஷன் டுவீலர் பார்க்கிங்கில் விட்டு விட்டு புதுச்சேரிக்கு சென்று விட்டோம். போலீசார் எங்களை தேடுவதை  அறிந்து நீதிமன்றத்தில் சரணடைந்தோம். இவ்வாறு கம்ரூதின் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

Tags : US ,embassy ,Balaji ,Criminal ,Consulate , US Consulate, Bomb, Major Criminal, Confession
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...