×

பல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே சாலையில் திறந்த நிலையில் இருக்கும் பெரிய கிணறால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.  பல்லாவரம் அடுத்த கவுல்பசார், மாங்காளியம்மன் கோவில் தெரு, விஜிஎன் சதர்ன் கார்டன் விரிவு அருகே பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பெரிய கிணறு ஒன்று உள்ளது. போதிய தடுப்பு வேலிகள் மற்றும் மூடி  இல்லாமல் எந்நேரமும் திறந்த நிலையிலேயே, ஆபத்தான வகையில் இந்த கிணறு உள்ளது. மிகவும் தாழ்வாக இந்த கிணறு இருப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட ஒதுங்கும் போது, நிலை தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த சாலையில் கிணறு இருப்பதே தெரியாத காரணத்தால் எளிதில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடத்தின் அருகே இதுபோன்ற திறந்த வெளி கிணறால், அவ்வழியே செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறி உள்ளே விழும் சூழ்நிலை அதிகமாக உள்ளது.

ஏற்கனவே பொழிச்சலூர், அனகாபுத்தூர் மற்றும் சிக்கராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்த நிலை கல்குவாரி குட்டைகளால் நாளுக்கு நாள் மரணம் அதிகரித்து வரும் வேளையில், பிரதான சாலையில் இது போன்று ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் இருக்கும் கிணறுகளும் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட வழிவகுக்கும்.  எனவே இதனை கருத்தில் கொண்டு, பல்லாவரத்தில் இருந்து கவுல்பசார் செல்லும் பிரதான சாலையோரம் ஆபத்தான வகையில் உள்ள கிணற்றை சுற்றிலும் போதிய தடுப்பு வேலிகள், எச்சரிக்கை விளம்பர பதாகைகள் அமைத்து, விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : roadside ,Motorists ,Pallavaram ,accident , Pallavaram, roadside, open well
× RELATED நஞ்சநாடு-இத்தலார் சாலையில் விபத்து அபாயம் நீடிப்பு