×

பட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்

சென்னை: ஆவடி அருகே பட்டாபிராமில் 5 லட்சம் கேட்டு 2 வயது ஆண் குழந்தையை  கடத்திய உ.பி.வாலிபரை போலீசார் நெல்லூரில் கைது செய்தனர்.  ஆவடி அடுத்த பட்டாபிராம், செந்தமிழ் நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராதி ஷாம் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராக்கி பிரஜாபதி. இவர்களுக்கு அத்தீஷ் பிரஜாபதி (2) என்ற மகன் இருக்கிறான். இவர்களது சொந்த ஊர் மத்தியபிரதேச மாநிலம். தம்பதியினர் கடந்த 12 வருடங்களாக மேற்கண்ட முகவரியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.  இதற்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சன்னிகுமார் (18) என்பவர் ராதிஷாமிடம் அறிமுகமாகியுள்ளார். அப்போது, அவர் தனக்கு சரிவர வேலை இல்லை எனவும், தங்களுடன் வேலைக்கு வருவதாகவும் ராதிஷாமிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பரிதாப்பட்ட அவர், சன்னிகுமாரை தனது வீட்டிலேயே தங்க வைத்து வேலைக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராதிஷாம் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, அவரிடம் சன்னிகுமார், தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். பின்னர் மதியம் தூங்கி எழுந்த சன்னிகுமார், வீட்டில் விளையாடி கொண்டிருந்த அத்திசை சாக்லெட் வாங்கி தருவதாக ராக்கியிடம் கூறிவிட்டு அழைத்து வௌியில் சென்றார். பின்னர் 4 மணி வரை அவர் குழந்தையுடன் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ராக்கி, தனது கணவர் ராதிஷாமிடம் செல்போனில் தொடர்புகொண்டு இதுபற்றி கூறினார். பின்னர், அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து அவசரமாக வீட்டுக்கு வந்தார். பின்னர், அவர் ராக்கியை அழைத்துக்கொண்டு ஆவடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் குழந்தை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில், இரவு 8 மணியளவில் சன்னிகுமார் ராதிஷாமை  செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், நான் குழந்தையை கடைக்கு அழைத்து சென்றேன். அந்த நேரத்தில் 2 பேர் என்னையும், குழந்தையையும் காரில் கடத்தி சென்றனர். அவர்களிடம் இருந்து குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்றால் ₹5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் குழந்தையை கொன்று விடுவார்கள் என கூறியுள்ளார். மேலும், அவர் ராதிஷாமிடம், உங்களது ஏ.டி.எம் கார்டை எடுத்து வந்துள்ளேன். இதனால், நீங்கள் பணத்தை வங்கி கணக்கில் போடுங்கள். நான் பணத்தை ஏ.டி.எம் கார்டு மூலம் எடுத்து கடத்தல் கும்பலிடம் கொடுத்து, குழந்தை மீட்டு வருவேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிஷாம், இரவு 9 மணியளவில் ஆவடி காவல் நிலையம் வந்து இன்ஸ்பெக்டர் காளிராஜிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து குழந்தை காணவில்லை என்ற வழக்கு கடத்தல் வழக்காக மாற்றப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 பின்னர், போலீசார் செல்போனில் பேசிய சன்னிகுமாரின் இருக்கும் இடத்தை செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது, அவர் குழந்தையுடன் இருக்கும் இடம் ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதி என தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் கார் மூலம் ராதிஷாமை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் நெல்லூருக்கு விரைந்தனர். பின்னர், அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர்,  போலீசார் ராதிஷாமை செல்போன் மூலமாக  சன்னிகுமாரை தொடர்பு கொண்டு பேச வைத்தனர். அப்போது, அவர் தான் பணம் கொண்டு வந்திருப்பதாகவும், நீ குழந்தையை நேரில் காண்பித்தால் பணத்தை கொடுத்து கடத்தல் கும்பலிடமிருந்து மீட்டு  விடுவேன் என கூறினார். பின்னர், அவர் மீண்டும் தொடர்பு கொள்கிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனையடுத்து, போலீசார் மீண்டும் செல்போன் டவரை ஆய்வு செய்தனர். அப்போது, சன்னிகுமார், அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருப்பது செல்போன் டவர் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு உள்ள விடுதி  ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு விடுதியில் சசிகுமார் குழந்தையுடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து குழந்தையையும் போலீசார் மீட்டனர். பின்னர், போலீசார் அங்கே வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர் அப்போது, சன்னிகுமார், குழந்தைகளை கடத்திய 2 பேர் நீங்கள் வருவது தெரிந்து தப்பிவிட்டனர் என போலீசாரிடம் கூறினார்.
மேலும், போலீசார் விசாரணையில் அவர் கூறுவது நாடகம் எனவும்,  குழந்தையை கடத்தி  ராதிஷாமிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று அதிகாலை நெல்லூரில் இருந்து சன்னிகுமாரை போலீசார் கார் மூலம் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். பின்னர், போலீசார் அவருடன் நேற்று காலை 7 மணியளவில் ஆவடி காவல் நிலையத்திற்கு வந்தனர். பிறகு, போலீசார் குழந்தையை தந்தை ராதிஷாமிடம் ஒப்படைத்தனர்.  மேலும், குழந்தையை கடத்திய சன்னிகுமாரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின்பேரில் புழல் சிறையில் இரவில் அடைக்கப்பட்டார்.  கடத்தப்பட்ட 6 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.

Tags : UP ,Andhra Pradesh , Buttapram, friend's child, kidnapping, UP Youth arrested,Andhra Pradesh
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை