×

நாடு திரும்பிய தெ.ஆப்ரிக்கா வீரர்கள் 15 நாட்களுக்கு தனிமையில் தங்க முடிவு

ஜோகன்ஸ்பர்க்: ஒருநாள் போட்டித் தொடர் ரத்தானதால் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தென் ஆப்ரிக்கா வீரர்கள் 14 நாட்களுக்கு தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க இருந்தது. தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய 2 போட்டிகளையும் ரசிகர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால்,  கொரோனா பீதி உச்சத்தை எட்டிய நிலையில் அரசு உத்தரவின்படி நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.  எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளும்   ரத்து செய்யப்பட்டதை அடுத்து, லக்னோவில் தங்கியிருந்த  குவின்டன் டி காக் தலைமையிலான  தென் ஆப்ரிக்க வீரர்கள் துபாய் வழியாக சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

நாடு திரும்பிய அவர்கள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் வழங்கிய அறிவுறுத்தலின்படி சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர். இப்படி 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுத்துவதுடன் அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். கூடவே மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்படும். இது குறித்து சிஎஸ்ஏ தலைமை மருத்துவ அலுவலர் ஷூயிப் மன்ஜ்ரா, ‘இந்தியாவில் இருந்து வந்துள்ள வீரர்கள், அலுவலர்கள் என எல்லோரையும் 14 நாட்களுக்கு  சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைத்துள்ளோம். ஏனென்றால் சமூகத்தில் அவர்களை சுற்றியுள்ள மக்களை மட்டுமல்ல, குடும்பத்தினரையும் பாதுகாக்க இப்படி செய்வதுதான் சரி’ என்று கூறியுள்ளார். சீனாவை தவிர மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுக்கு ஆளான பலரும் விமானம் மூலமாக நாடு திரும்பியவர்கள். அதனால் வெளிநாடு சென்று திரும்புபவர்களை அந்தந்த நாடுகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்குவதும், தனிமைப்படுத்துவதும்  நடக்கிறது.  அந்த அடிப்படையில் தென் ஆப்ரிக்கா வீரர்களும் அந்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



Tags : South African , India team, South Africa team, Corona
× RELATED நிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்