×

சட்டப்பேரவை துளிகள்...

* கொரோனா பரிசோதனை எல்லோருக்கும் அவசியமில்லை
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பொன்முடி (திமுக): கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையை முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில் 5 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் செயல்படுகிறது. இந்த மையங்களில் தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பரிசோதிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும்.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நான் ஆய்வு செய்த போது எம்என்சி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் பரிசோதனைக்கு வந்திருந்தார். அவரிடம், கொரோனா நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ சென்று வந்தீர்களா, கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா என்று கேட்டேன். அப்படி எதுவும் இல்லை என்று கூறினார். எனக்கு இருமல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று அலுவலகத்தில் கூறியதால் இங்கு வந்தேன் என்று கூறினார். எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. அறிகுறிகள் இருந்தால் மட்டும் மருத்துவரை அணுகலாம்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: கொரோனா பாதிப்பு மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. பத்திரிகையில் கொரோனா வைரஸ்க்கு ராஜஸ்தானில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. இது அரசுக்கு தெரியுமா. இதுதொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. விஜயபாஸ்கர்: கொரோனா வைரஸ்க்கு இந்த மருந்துதான் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருந்தால் அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் நோய்களுக்கு மருந்து கொடுப்பது போல் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடைபெற்று வருகிறது. விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை, புதிய மருந்து கண்டுபிடிப்பு போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

* முட்டை, கோழி இறைச்சியால் கொரோனா நோய் வராது
நாமக்கல் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் (அதிமுக): கொரோனா பீதியால் கோழி முட்டையின் விலை ரூ.1.50 காசுக்கும், கோழிக்கறி ரூ.15 என்றும் அதல  பாதாளத்துக்கு விலை சரிந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின்  வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா நோய் பரவாது என்று சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. கொரோனா பீதியால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

* 1458 தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம்
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: பொதுப்பணித்துறையின் 2324 தினக்கூலி ஊழியர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது போதிய அளவு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் ஓய்வு பெற்றால், அதற்குரிய பலன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக 1,400க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: பொதுப்பணித்துறையில் பாசன உதவியாளர், துப்புரவாளர், தோட்ட ஊழியர்கள் என 5431 பேர் பணிபுரிகின்றனர். இதில், 2324 பேர் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று தினக்கூலி ஊழியர்களை 1458 பேர் பணி நிரந்தரம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* இருமினார் எடப்பாடி பயந்தார் துரைமுருகன்
விவாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு இருமல் வந்தது. இதையடுத்து உடனடியாக அவர் தனது பேச்சை நிறுத்தி விட்டு தண்ணீர் குடித்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, இரண்டாவது முறையாக அவருக்கு இருமல் வந்தது. அப்போதும் பேச்சை நிறுத்தி விட்டு மீண்டும் தண்ணீர் குடித்தார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் கொரோனா வந்து விடுமோ என்று முதல்வர் பார்த்து கிண்டல் உடன் கேட்டார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீங்கள் 1 மீட்டர் தள்ளி இருப்பதால் உங்களுக்கு கொரோனா வராது என்று கூறினார். இதனால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.


Tags : Law firm , The law firm, drops
× RELATED ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது...