×

ரேஷன் கடை ஊழியர்கள் மன உளைச்சல் ஒரு மூட்டைக்கு 3 கிலோ எடை குறைவு: தற்கொலைக்கு தூண்டும் அதிகாரிகள்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படும் நிலையில், இதை தட்டிக்கேட்கும் ஊழியர்கள்  நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யுமளவுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, ரேஷன் கடையில் பொருட்களை இறக்கும்போது, எடை போட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்த 70 % மக்களுக்கு அரசின் பொது வினியோக திட்டத்தில் வழங்கும் உணவுப்பொருட்கள் மிக முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ரேஷன் கடையில் விழிப்போடு இல்லாவிட்டால் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எண்ணம் மக்களிடம் ஆழமாக உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், ‘பாயின்ட் ஆப் சேல்’ எனும் கருவி வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பில் போடும்போது, பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரரின் செல்போன் எண்ணுக்கு, ‘எஸ்எம்எஸ்’ செல்லும் வகையில் திட்டம் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பொருட்கள் வினியோகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே வேளையில், ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் பொருட்களின் எடை குறைவாக இருப்பது பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களோ நாலாபுறமும் வரும் பிரச்னைகளையும், சிரமங்களையும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். எல்லா தவறுகளுக்கும் இவர்களே காரணம் என்ற மாய தோற்றத்தை ஏற்று சுமைதாங்கிகளாக வேலை செய்கின்றனர். ஒருசில விற்பனையாளர்கள் தவறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. இதில் நேர்மையானவர்களும் பாதிக்கின்றனர். இவர்களை தவறு செய்ய தூண்டுவதே அதிகாரிகள்தான் என்பது வேடிக்கையான விஷயம். ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள் சப்ளை செய்யும் போதே எடை குறைவாக மூட்டைகள் வருகிறது. எடை குறைவு ஏன் என பணியாளர் கேள்வி கேட்க முடியாது. மீறி கேட்டால் அந்த விற்பனையாளரை குறிவைத்து நடவடிக்கை பாயும். இதற்கு பயந்து எடைகுறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு அதை பொருட்கள் வாங்குவோர் தலையில் சுமத்துகின்றனர்.

அரிசி பெறும் அனைத்து கார்டுகளுக்கும் அரிசி வழங்கப்படும் என அரசு அறிவிக்கிறது. ஆனால் 70 சதவீதம் என்ற அளவிலே அரிசி வினியோகிக்க வேண்டும் என்பது அதிகாரிகளின் உத்தரவு. குறிப்பிட்ட சதவீதத்தை விட கூடுதலாக வினியோகம் நடந்தால் அடுத்த மாதமே அந்த கடையில் 100 சதவீதம் தணிக்கை நடைபெறும். கிராம பகுதியில் அனைவரும் அரிசி பெறுகின்றனர். கிராமத்தில் அரிசி வினியோகம் இல்லை என கூறினால் விற்பனையாளர் பல சங்கடங்களை சந்திக்க வேண்டும். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 30 சதவீதம். இதிலும் பேரலுக்கு 10 லிட்டர் குறையும்.

மக்கள் விரும்பி வாங்கும் பொருட்கள் ஒதுக்கீடு குறைவாக வழங்குவதால் முந்துபவர்களுக்கே பொருட்கள் கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பொருட்களை பெற முடியாத கார்டுதாரர்களிடம் அடுத்த மாதம் வாங்கி கொள்ளுங்கள் என கெஞ்சி ஊழியர்கள் சமாளிக்கின்றனர். சில அதிகாரிகளுக்கும், கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கும் மாமூல் கொடுப்பதற்கே ஊழல் செய்ய தூண்டப்படுவதாக ஊழியர்கள் புலம்புகின்றனர். கடைகளுக்கு பொருட்கள் ஒதுக்கீடு செய்யும் பிரிவிற்கு கடைவாரியாக மாதம் கப்பம் கட்டும் வழக்கம் உள்ளது. இதில் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள்தான். மாமூல் வசூலிப்போர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ரேஷன் கடைகள் நியாயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.மேலும், ரேஷன் கடைகளில் பொருட்களை இறக்கும்போது, ஒவ்வொரு மூட்டையையும் எடை போட்டு சரியான அளவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஒரே துறையின் கீழ் இயங்குமா ரேஷன் கடைகள்
ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலக பறக்கும் படையினர், கூட்டுறவு இணை பதிவாளர், துணை பதிவாளர், கூட்டுறவு சார் பதிவாளர், தொழிலாளர் நல எடை ஆய்வாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், சிவில் சப்ளைஸ் மண்டல மேலாளர், துணை மேலாளர், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு வங்கியின் செயலர், கூட்டுறவு வங்கியின் தலைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மாதம்தோறும் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை கடை ஊழியர்கள் கப்பம் கட்ட வேண்டியுள்ளது. கப்பம் கொடுக்காவிடில், எடை குறைவு, இருப்பு குறைவு என ஏதாவது காரணம் காட்டி துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதால் மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகின்றனர். எனவே, ரேஷன் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Ration shop staff, depression, bundle, 3kg, weight loss, suicide, officers
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...