×

அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களுக்கு முட்டைகளை வீடுவீடாக சென்று விநியோகம் செய்யவேண்டும்: திடீர் உத்தரவால் சத்துணவு ஊழியர்கள் கொதிப்பு

சென்னை: கொரோனா தொற்று அச்சத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதிவரை விடுமுறை அளித்து அரசு அறிவித்தது. இதையொட்டி, சத்துணவுக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வந்த முட்டைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று, ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு தலா மாணவனுக்கு 3 முட்டைகள் வீதம் என, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் விநியோகம் செய்யப்படும். இந்த முட்டைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி வழக்கம்போல் மாணவர்களுக்கு முட்டை வழங்கியபோது, விடுமுறை அறிவிப்பு வெளியானது. இதனால், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கவேண்டிய முட்டைகள் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் வைக்கப்பட்டுளள்ன. இந்த முட்டைகளை மாணவ, மாணவிகளிடமோ அவர்களது பெற்றோரிடமோ ஒப்படைத்து கையொப்பம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பல கிராமங்களில் சுமார் 4 கி.மீ.,க்கு மேற்பட்ட தூரத்தில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

அவர்களைத் தேடி கண்டுபிடித்து முட்டைகளை வழங்கவேண்டும் என்ற நிலையால் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 73 ஆயிரம் முட்டைகள் தேங்கியுள்ளன. மேலும் கொரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாதா என சத்துணவு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags : Anganwadi University , Anganwadi, student, egg, home, distribution, nutritional staff, boiling
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...