×

பொறியியல் கல்லூரி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவுக்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தனியார் சுயநிதியின் கீழ் இயங்கும் இதுபோன்ற கல்லூரிகளில் நடத்தப்படும் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அரசு சார்பில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த குழு நிர்ணயம் செய்யும் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். அதற்கு பிறகு அந்தந்த ஆண்டின் நிலைமைக்கு ஏற்ப புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். கடந்த 2017-2018ம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை அப்போதைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் நிர்ணயம் செய்தார்.

இதையடுத்து, 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழுவின் தலைவராக இருந்த நீதிபதி பாலசுப்ரமணியன்  கடந்த 2019ம்  ஆண்டு மறைந்த பிறகு கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனால் குழுவுக்கு தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டணக் குழுவுக்கு புதிய தலைவரை உயர்கல்வித்துறை நியமித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அரசாணை வெளியிட்டுள்ளார். ‘சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பரிந்துரையின் பேரில் கட்டணக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படுகிறார். இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை அவர் நிர்ணயம் செய்வார்’ என ஆணையில் கூறப்பட்டுள்ளது.

* கட்டண நிர்ணயக் குழுவின் பணிகள்
பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த குழு 2020-21க்கான கல்வி ஆண்டில் எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என்பதை உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ, எம்சிஏ படிப்புகள், பொறியியல் டிப்ளமோ படிப்புகள், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங் தொழில் நுட்பம் மருத்துவம் இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம். இளநிலை, முதுநிலை மருந்து தயாரிப்பு படிப்புகள்.

* இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள்
மேற்கண்ட பாடப் பிரிவுகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய, சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடம் இருந்து கல்விக் கட்டணம் தொடர்பாக கருத்துகளை மேற்கண்ட குழு கேட்டுப் பெறும். பின்னர் 2020-21ம் ஆண்டில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய, கல்லூரிகளிடம் இருந்து பெறப்படும் வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட வருவாய் மற்றும் செலவினம் குறித்த அறிக்கை, கல்லூரிகளின் கணக்குப்புத்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

* பள்ளி கட்டண குழு தலைவர் பதவி இந்த மாதத்துடன் காலி
உயர்கல்வித்துறையில் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது போல, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக கடந்த 2008ம் ஆண்டு ஒரு கட்டண நிர்யணக்குழு அமைக்கப்பட்டது. குழுவின் தலைவர்களாக நான்கு பேர் இதுவரை பதவி வகித்துவிட்டனர். தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைவராக இருக்கிறார். இவரது பதவிக்காலம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தெரிகிறது.

Tags : college committee , College of Engineering, Fee Determination, Committee, New Chair, Appointment
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...