×

சமையல் காஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: எண்ணெய் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்தால் அந்த ஏஜென்சியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை அண்ணனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகிக்கும்போது நுகர்வோரிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமையல் காஸ் புக்கிங் செய்பவர்களிடம் சமையல் காஸ் கட்டணத்துடன் சிலிண்டர் விநியோகத்திற்கான கட்டணமும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது. தரைத்தளத்துக்கு ஒரு கட்டணம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அந்தந்த தளத்திற்கு ஏற்ப ஒரு கட்டணம் என்று சிலிண்டர் விநியோகத்துக்கு ரூ.30 முதல் ரூ.100 வரை இஷ்டம்போல கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு சீருடை வழங்கவும், அடையாள அட்டை வழங்கி பணி வரன்முறை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான உரிமம் வழங்கும்போதே பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல் தொடர்ந்து 4 முறை முறைகேடுகளில் ஈடுபட்டால் அந்த விநியோகஸ்தரின் உரிமம் ரத்து செய்யப்படும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். கடந்த 2019-20ல் தமிழகத்தில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்த நிறுவனங்களுக்கு ரூ.21 லட்சத்து 74 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க நுகர்வோர் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தவும், அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு புகார் அளிக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விநியோகஸ்தரின் சேவையில் திருப்தி இல்லை என்றால் நுகர்வோர் தங்களது சமையல் எரிவாயு இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்து. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பதில் தரவில்லை. எனவே, இந்தியன் ஆயில் நிறுவனம் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : oil companies , Cooking gas cylinder, distribution, surcharge, license revocation, oil companies, iCord
× RELATED 417 ரூபாயாக இருந்ததை ரூ.919க்கு...