×

14வது ஊதிய உயர்வு பேச்சு தள்ளி வைப்பு: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: வரும் 20ம் தேதி நடைபெறுவதாக இருந்த 14வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: முதலமைச்சர், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவில், போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் இடம் பெற்றுள்ளார். மேலும், தலைமைச் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், அலுவல் சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளார்.  

போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் உயர் மட்டக் குழுவில் இடபெற்றுள்ளதைத் தொடர்ந்து, கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த விவரங்களை அவ்வப்பொழுது தலைமைச் செயலாளருக்கும், முதலமைச்சர் அலுவலத்திற்கும் வழங்கிடுமாறு பணிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வரும் 20.03.2020 அன்று நடைபெறவுள்ள 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்குபெற இயலாத நிலை உள்ளது. ஆகையினால், 20.03.2020 அன்று நடைபெறவிருந்த 14வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையானது, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Transport Department , 14th Wage Increase, Speech, Postponement, Department of Transport
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...