×

டெல்லி ரயிலில் சென்னை வந்தவருக்கு கொரோனா வெளிமாநில பயணிகளை கண்காணிக்க உத்தரவு

* மாநிலம் முழுவதும் அனைத்து பெரிய கடைகளும் அடைப்பு
* வழிபாட்டு தலம், விளையாட்டு மைதானம், பூங்காக்கள் மூடல்
* அச்சத்தில் வீட்டுக்குள் முடங்கினர் பொதுமக்கள்

சென்னை: காஞ்சிபுரம் பொறியாளரைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து சென்னை வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயதானவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்  ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓரளவு சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.  

கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல்குளம், உடற்பயிற்சி கூடங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் பெரிய கடைகளை அடைக்கும்படி அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டால், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் மயிலாப்பூர், அடையாறு, எழும்பூர், பாரிமுனை, குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்கள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூட்டமாக கூடினால் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்று அச்சத்தால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். இதற்கிடையில் விமானம் மற்றும் கப்பல் மூலம் வருபவர்களை தொடர்ந்து ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை சோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டனர்.

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடந்த சோதனையின் போது 20 வயது இளைஞர் ஒருவருக்கு காய்ச்சல் அதிமாக இருப்பது கண்டறியப்பட்டது. இவர், வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்தவர். அவர் உடனடியாக, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர்.

காஞ்சிபுரம் பொறியாளரைத் தொடர்ந்து ரயில் மூலம் சென்னை வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர் ரயில் மூலம் வந்த காரணத்தால், அவருடன் வந்த பலருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று மக்கள் பீதி அடைந்துள்ளனர். டெல்லியில் இருந்து தினசரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட 8 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் ஆக்ரா, போபால், நாக்பூர், வாரங்கல், விஜயவாடா உள்ளிட்ட முக்கிய நகரங்களை கடந்து சென்னை வந்தடைகிறது. இவற்றுக்கு இடையில் 20 மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த ரயில்கள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்கள் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில்தான் வருகின்றனர். இதனால் இந்த பெட்டிகளில் கூட்டம் அலைமோதும். விடுமுறை நாட்களில் அமர முடியாத அளவுக்கு நெரிசல் இருக்கும். ஒருவேளை கொரோனா பாதிக்கப்பட்டவருடன் முதியவர்கள் யாராவது பயணித்து இருந்தால் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே கொரோனா பாதிக்கப்பட்டுள்ள டெல்லியை சேர்ந்தவருடன் பயணம் செய்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இல்லை என்றால் இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் இதனால் பொதுமக்கள் இடையே அச்சமும் பீதியும் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வந்த 1,89,750 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் 2984 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகினறனர். பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 222 ரத்த மாதிரிகளில் 175 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார். அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்.

இதற்கிடையில் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயதுள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரயில் மூலம் தமிழகம் வருபவர்கள் மாநில எல்லைகளில் உள்ள ரயில் நிலையங்களில் சோதனை செய்யப்படுகின்றனர். இதற்காக 500 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கைகழுவும் திரவம், முககவசம் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு சோதனை செய்ய ராஜிவ் காந்தி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Coroner ,Delhi ,passenger ,Chennai ,train Coroner , Delhi Rail, Chennai, Corona, Outstation Traveler, Track, Direction
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...