×

தமிழகத்தில் 2 வது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம்...அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அந்த நபருக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று, தற்போது 100 -க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா பாதித்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா பாதித்த இளைஞர் 20 வயதுடையவர். அவர் ரயில் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார். அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும், பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா அறிகுறி மற்றும் கொரோனா பாதித்தவருடன் இருந்தவர்கள் என்று 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,Tamil Nadu ,Nadu , Vijayabhaskar, Minister of Travel, Coronation, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...