×

கீழடி, கலாம் நினைவிடம் உட்பட சுற்றுலாத் தலங்கள், மைதானங்கள், பூங்காக்கள் முழுவதுமாக மூடல்

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 6 மாவட்டங்களிலும் சுற்றுலாத் தலங்கள், மைதானங்கள், பூங்காக்கள் என அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை:  மதுரை நகரில் உள்ள விளையாட்டு  மைதானங்கள், பூங்காக்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்திற்குள் கால்பந்து, ஹாக்கி, நீச்சல்குளம் உள்ளிட்ட பிரத்யேக தனி மைதானங்கள் அமைந்துள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள், ஆர்வலர்கள், நடை பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம். அரசு உத்தரவைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கையாக விளையாட்டு மைதானத்தின் பிரதான நுழைவு வாயில் நேற்று காலை இழுத்து மூடப்பட்டு, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

மதுரையில் மதுரைக்கல்லூரி மைதானமும் நேற்று முதல் மூடப்பட்டது. முக்கிய மால்களும், வணிக மையங்களும், மதுரையின் முக்கிய பொழுது போக்கிடமான ராஜாஜி, எகோ பூங்காக்கள் உள்ளிட்டவைகளும் நேற்று முதல் மூடப்பட்டன. கலெக்டர், மாநகராட்சி அலுவலகங்கள், பஸ், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டு, பொதுமக்கள் கைகளில் தடவிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால், மதுரை வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கிறது. அவனியாபுரம்:  கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக பயணிகள் கூட்டமின்றி மதுரை  விமானநிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. சிங்கப்பூருக்கு தினசரி சென்று வந்த  விமானம், வாரத்தின் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு  தினசரி சென்று வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செவ்வாய், வியாழன்,  சனி ஆகிய 3 நாட்களுக்கான கொச்சி - மதுரை- சிங்கப்பூர் விமான சேவையை ரத்து  செய்துள்ளது. இது வரும் 28ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 28ம் தேதிக்கு பிறகு, 4 நாட்களுக்கு  டெல்லி - மதுரை - சிங்கப்பூர் விமான சேவையும் ரத்தாகிறது. இதற்குப்பதிலாக  29ம் தேதியிலிருந்து மதுரையில் இருந்தே சிங்கப்பூருக்கு தினமும் நேரடி  விமான சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான  நிலையத்தில் உள்நாட்டில் டெல்லி, மும்பை, ஐதராபாத், சென்னை, கொச்சி,  பெங்களூரு என பல இடங்களுக்கு விமானங்கள் 18 முறை சென்று வருகின்றன. பயணிகள்  எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இந்த சேவையும் பாதிக்கப்பட  வாய்ப்பிருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கீழடியை பார்வையிட தடை திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப். 19ம் தேதி முதல் ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு தொடங்கியுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில்  கீழடி அகழாய்வு தளத்தை பார்வையிட வரும் 31ம் தேதி வரை மக்கள் வர வேண்டாம் என, கீழடி ஊராட்சி மன்றம் நேற்று அறிவித்துள்ளது. கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன் கூறுகையில், ‘‘கிராம மக்கள் அதிகளவில் பணிபுரியும் கீழடி அகழாய்வு தளத்தில் வெளிநபர்கள் வருவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பார்வையாளர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார். கீழடியில் இதுவரை மூன்று குழிகளும், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தலா இரண்டு குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.

கலாம் நினைவிடம் மூடல்
ராமேஸ்வரம், பேக்கரும்பிலுள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில்  கிருமிநாசி மருந்து நேற்று முதல் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில இன்று முதல் வரும் 31ம் தேதி வரை கலாம் நினைவிடத்தை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும், நினைவிடம் மூடப்படுவதால் சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறிச்சோடியது மதுரை விமானநிலையம்
கொடைக்கானலில் வெளிநாட்டவருக்கு ‘தடா’ கொடைக்கானலில்  வட்டக்கானல் பகுதியில் தங்கி உள்ள வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டு விட்டன.  நேற்று மாலை கொடைக்கானல் ஆர்டிஓ சிவக்குமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் கொடைக்கானல் போலீசார், தாசில்தார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், வட்டக்கானல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அங்குள்ள சுமார் 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, உடனடியாக அவர்களது நாட்டுக்கு செல்ல உத்தரவிட்டனர். இங்கு தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி வின்சென்ட், உடல்நலக் குறைவுடன் இருந்தார். அவருக்கு, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளார். கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறைகள் ஒதுக்க வேண்டாம் என கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

பிளவக்கல் அணை மூடல்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. மலையடிவாரத்தில் பிளவக்கல்லில் பெரியாறு, கோவிலாறு என 2 சுற்றுலா தலங்கள் உள்ளன. வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் 31ம் தேதி வரை இந்த சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.  

கலை நிகழ்ச்சிகளுக்கு தடை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஆண்டிபட்டி காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆண்டிபட்டி பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது என்று டிஎஸ்பி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Tags : closure ,parks ,tourist attractions ,Kalam Memorial ,Kalam ,Tourist Places ,Kalam Monument , Kalam, Kalam Monument, Tourist Places, Parks, Parks, Closures
× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது