×

நிலுவைத் தொகையைச் செலுத்தாத ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள்: சிறை செல்ல நேரிடும்....உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டெல்லி: ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் அவற்றின் மேலாண்மை இயக்குநர்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிமக்கட்டணம், வரி, அலைக்கற்றைக் கட்டணம் உள்ளிட்ட வகைகளில் வோடாபோன், ஏர்டெல், டாட்டா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு ஒரு லட்சத்து 2,447 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.

அரசின் மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளாத இந்த நிறுவனங்கள், தங்கள் கணக்கீட்டின்படி குறைவான தொகையே செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்தன. இந்நிலையில் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின்படி 16 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகத் தொலைத்தொடர்புத்துறைக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தீர்ப்பளித்தது.

நிலுவைத் தொகையைத் தவணை முறையில் பெற அனுமதி அளிக்கக் கோரித் தொலைத் தொடர்புத்துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஷா அமர்வு, முன்பு அளித்த தீர்ப்பில் இருந்து பின்வாங்க முடியாது எனத் தெரிவித்தது. ஏற்கெனவே நிர்ணயித்த தொகையை மறுமதிப்பீடு செய்யக் கோருவது நீதிமன்ற அவமதிப்பாகும் எனத் தெரிவித்ததுடன், தேவைப்பட்டால், மேலாண் இயக்குநர்களைச் சிறைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்.


Tags : Supreme Court ,Airtel ,companies ,Vodafone ,Supreme Court Airtel , Arrears, Airtel, Vodafone, Supreme Court, Warning
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...