×

கொரோனா தாக்கத்தால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை ரூ.1.90ஆக நிர்ணயம்

நாமக்கல்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 13 பேர்  மீட்கப்பட்டுள்ளார்; 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 25 வெளிநாட்டினர் உள்பட 147 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் கடைக்கு செல்லவில்லை. இதனால் இறைச்சிக் கடைக்காரர்கள் பெரிதும் பாதிப்பு  அடைந்துள்ளனர். இதனால், கறிக்கோழி கொள்முதல் மற்றும் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக கறிக்கோழிகளின் முக்கிய தீவனமான மக்காச்சோளம் விலை சரிந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக  நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் சத்துணவு, வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டதால் முட்டைகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், கொரோனா பீதியால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை சரிந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூ.1.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கடைகளில் ஒரு  முட்டை ரூ.3.50 முதல் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை குறைந்தாலும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறைக்கப்படுவதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றன.

வாங்கிலி சுப்பிரமணி பேட்டி:


நாமக்கலில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி, கோழிக்கறி, முட்டை சாப்பாடு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம்  நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பீதியால் விற்பனையாகாமல் நாமக்கலில் 15 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மேலும் 4 கோடி முட்டைகள்  தேக்கமடைந்துள்ளதாக கூறினார்.

ரூ.4.50 ஆக இருந்த முட்டை விலை தற்போது ரூ.1.50 ஆக குறைந்ததற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்தியே காரணம் என புகார் தெரிவித்தார். ஒரு கிலோ ரூ.90 ஆக இருந்த கறிக்கோழி வதந்திகளால் ரூ.50 ஆக குறைந்துவிட்டது  என்றும் குற்றம்சாட்டினார்.


Tags : Namakkal , Corona Impact Declines In 10 Years: Egg Purchase Price at Namakkal
× RELATED பொதுக்கூட்டம் நடத்த 48 மணி நேரத்துக்கு முன் அனுமதி அவசியம்