×

திருமயம் அருகே மாத விலக்கு காலத்தில் தனிக்கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்படும் பெண்கள்: காலம் காலமாக நடக்கும் விநோதம்

திருமயம்: திருமயம் அருகே மாத விலக்குள்ள பெண்களுக்கு தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு தனிமை படுத்தும் நிகழ்வு காலங்காலமாக பின்பற்றுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை கட்டுப்படுத்த பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும் எதாவது பகுதியில் மதத்தின், சாதியின் பெயரால் பெண்களுக்கு எதிரான குற்றம் நடந்து கொண்டே இருப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் பெண் குழந்தை பிறந்த நாளில் இருந்தே அவர்கள் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுவது ஒருசில நடவடிக்கைகளை கொண்டு நாம் இனம் காண முடிகிறது. இதில் ஒருசில அடக்கு முறையகள் நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நடப்பது வேதனை அளிக்கிறது. பெரும்பாலும் எந்த ஒரு மதமும், சாதியும் கட்டுப்பாடுகளை பெண்களுக்கு மட்டுமே புகுத்துவது ஏன் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் சில சமுதாய கட்டுப்பாடுகள் சமுதாய ஒழுக்கம், நல்லெண்ணங்களை வளர்ப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் பெண்கள் மீது புகுத்தப்படும் கட்டுப்பாடுகளை ஒரு சில பெண்கள் பாரம்பரிய மரபு என மன மகிழ்வோடு ஏற்றுக் கொண்டாலும் ஒருசிலர் வேறு வழியின்றி பின்பற்றுவது, வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பது ஆங்காங்கே காண முடிகிறது. இதில் பெண்களை தனிமைப் படுத்துவதில் முதன்மையான காரணமாக உள்ளது அவர்களின் மாதவிடாய் எனும் மாதவிலக்கு தான். எப்பொழுது ஒரு பெண் குழந்தை பூப்படைகிறாளோ அன்றிலிருந்து அவள் தனது ரத்த உறவுகள், சுற்றத்தார்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறாள்.

இது பெண்களுக்கு நடக்கும் இயற்கை உபாதைகளில் ஒன்று என்று டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இதனை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் பெண்களின் பெற்றோர்களே இல்லை என்பது நிதர்சணமான உண்மை. இதனிடையே கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தற்போது இது போன்ற மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிபடுத்துவது குறைந்து வந்தாலும் கிராமப் புறங்களில் இன்றளவும் இதனை பெரும்பாலான குடும்பங்கள் சாதி, மத பேதமின்றி பின்பற்றி வருவது குறிப்பிடதக்கது. காரணம் இது பெண்களுக்கு நடக்கும் இயற்கை உபாதை என்று ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் பெண்களே இல்லை என்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் மனித இனம் தனக்கு சாதகமான ஒன்றில் தன்னுடைய பாரம்பரியத்தில் இருந்து விலகி காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் போது பெண்களுக்குள் புகுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மட்டும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி கொள்ள மனம் வருவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோன்று திருமயம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மாதவிடாய் காலங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து தனி கட்டிடத்தில் தனிமைப்படுத்தி கொள்ளும்நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த முறை கடந்த 6 தலைமுறைகளுக்கு மேலாக பின்பற்றி வருவதாகவும், இதனால் எங்களுக்கு எந்த ஒரு அசவுகரியமும் இல்லை என்று அப்பகுதி பெண்கள் கூறிவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் கேட்டபோது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோனாபட்டு கிராமம். இது செட்டுநாட்டு கிராமங்களை உள்ளடக்கியது என்பதால் இங்கு கட்டிட கலையும், சமயற்கலையும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல் இங்குள்ள கொப்புடையம்மன், சிவன் கோயிகளும் எங்கள் மக்களின் வாழ்க்கையோடும், கலாச்சாரத்தோடும் இணைந்தே உள்ளது. இதில் கொப்புடையம்மன் கோயில் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்களும் இணைந்து விடிவிடிய தேர் இழுத்து விழா கொண்டாடுவது வழக்கம். அப்படிப்பட்ட அம்மனுக்கு கோனாபட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பூஜை செய்து வருகின்றனர். அந்த குறிப்பிட்ட சமுதாயத்தில் சுமார் 120 குடும்பங்கள் உள்ள நிலையில் இந்த குடும்பங்களில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிமைப்படுவதை பல தலைமுறைகளாக கடைபிடித்து வருகிறோம். இதுபோன்ற மாதவிடாய் காலங்களில் பெண்கள் குடும்பத்தினருடன் இருப்பதை தவிர்ப்பதற்காக ஊருக்கு பொதுவான இடத்தில் அவர்களுக்கு என குடியிருப்பு பகுதியில் தனியாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாதவிடாய் காலங்களில் குழந்தை முதல் பெண்கள் வரை இங்கு தான் தங்க வேண்டும். இவர்களுக்கு என தனி சாப்பாட்டு தட்டு, குடிநீர் குவலைகள் வைத்திருப்பார்கள். மாதவிடாய் காலங்களில் அங்கு தங்கும் அந்தந்த குடும்பத்தினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருவது குறிப்பிடதக்கது. மாதவிடாய் காலங்களில் தனிமை படுத்தப்பட்ட பெண் குடும்பத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் கலந்து கொள்வதை தவிர்த்து, இறப்பு, விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம். மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என யாரும் பெண்களை கட்டாயப்படுத்துவது இல்லைமாறாக எங்கள் சமுதாய பெண்களே மூதாதையர் பின்பற்றிய வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

 இது எங்கள் சமுதாய ஆண்களை திருமணம் செய்து கொண்டு வரும் வெளியூர் பெண்களுக்கும் பொருந்தும். இது கடவுளின் நம்பிக்கையால் பின்பற்றி வருவதால் பெண்கள் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது இல்லை. அதேபோல் 20 ஆண்டுகளுக்கு முன் எங்கள் சமுதாய பெண்களுக்கு இந்த கட்டிடத்தில் தான் பிரசவம் நடைபெற்றது என்பது கூடுதல் தகவல். இதனிடையே அம்மனுக்கு பூஜை செய்பவர் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் அந்த குறிப்பிட்ட நபர் இறந்த உடலை பார்க்க மாட்டார், இறந்த உடல் புதைக்கும் வரை வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டும் இது ஆண்கள் பின்பற்றும் பாரம்பரிய முறையாகும். மேலும் இது பாரம்பரியமாக கடைபிடித்து வருவதால் இதிலிருந்து தங்களை விலக்கி கொள்ள மனம் வரவில்லை.எனவே மாவட்ட நிர்வாகம் இதனை பாரம்பரிய முறையாக கருதி மாதவிடாய் காலங்களில் அங்கு தங்கும் பெண்களுக்கு முறையான குடிநீர், கழிப்பறை, குளியலறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இது போன்ற பழக்கங்கள் கோனாபட்டு மட்டுமன்றி திருமயம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சந்தனவிடுதி, குளத்துப்பட்டி, ஊனையூர், முனசந்தை உள்ளிட்ட சில கிராமங்களில் இது போன்ற முறைகள் பின்பற்றும் நிலையில் ஒரு சில கிராமங்கள் இந்த வழக்கத்தை கைவிட்டுவிட்டனர் என்றனர்.

Tags : women ,Tirumayam , Tirumayam
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...