×

தமுக்கம் மைதானத்தை மூடியதால் காந்தி மியூசிய அமைதி நோக்கம் சிதையும் அபாயம்

மதுரை: காந்தி மியூசியம் இங்கு கட்டுவதற்கு அமைதி பகுதியாக காட்சியளித்த தமுக்கம் முக்கிய காரணமாகும். இதுவரை அமைதி பகுதியாக நீடித்து நோக்கத்தை நிறைவேற்றி வந்தது. 10 ஆண்டுக்கு முன் நேரு நகர் மேம்பாட்டு திட்டத்தில் இந்த மைதானத்தை மூடாமல் கடைகள் கட்ட உருவான திட்டம் நிராகரிக்கப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கலாச்சார மையமாக புகுந்து மைதானத்தை அழிக்கிறது. வரலாற்று சிறப்பு மிகுந்த மதுரை தமுக்கம் மைதானத்தை மூடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.45 கோடியில் புதிய கலையரங்கம், வணிக வளாகம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த மைதானத்தையே மூடி, தற்போதுள்ள கலையரங்கின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மைதானத்தையும் தோண்டும் பணியை துவங்கி உள்ளனர். இந்த மைதானத்தை மூடியது மதுரை வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- மதுரையை கடைசியாக ஆண்ட ராணி மங்கம்மாள் அரண்மனை (தற்போது காந்தி மியூசியமாக உள்ளது) அருகில் யானை, குதிரைகளின் வீரவிளையாட்டுகளுக்காக பெரிய திடல் உருவாக்கினார். இது தான் தமுக்கம் மைதானமானது. 10 ஏக்கர் பரப்பிலான இந்த மைதானம் அருகில் தான் காந்தி மியூசியம் அமைந்துள்ளது. 1959ம் ஆண்டு மதுரையில் காந்தி மியூசியம் அமைக்க இடம் தேர்வு செய்தபோது, அதன் அருகில் தமுக்கம் மைதானம், அதன் எதிர்பகுதியில் இன்னொரு மைதானம் போன்ற இடமும் வெற்றிடமாக இருந்தது முக்கிய காரணமாகும். ஏனென்றால் காந்தி மியூசியம் அமைதியான பகுதியில் அமைந்து இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். இதனால் அந்த சாலைக்கு காந்திமியூசிய சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. காந்திமியூசியத்தை அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.

அப்போது காந்திமியூசிய சுற்றுச்சூழல் அமைதி பகுதியாக நீடிக்க வேண்டுமென நேரு உள்ளிட்ட தலைவர்கள் நினைத்தனர். அதன்படி தமுக்கம் மைதானம் காக்கப்பட்டது. 1981ல் உலக தமிழ் மாநாடு நடைபெற்றபோது, மைதானத்திற்கு அழகூட்டும் வகையில் சங்கரதாஸ்சுவாமிகள் பெயரில் கலையரங்கம், தோரணவாயில், கோபுரம் கட்டப்பட்டது. மைதானம் அழியாமல் காக்கப்பட்டது. எதிரில் வெற்றிடமாக இருந்த இடம் அமைதி பகுதியாக நீடிக்க பூங்காவும், முருகன் கோயிலும் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுக்கு முன் நேருநகர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மைதானத்தை மூடாமல் கடைகள் மட்டும் கட்டும் திட்டம் உருவானது. ஆனால் காந்திமியூசிய அமைதி பகுதிக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று அந்த திட்டத்தை தமிழக அரசு நிராகரித்தது.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கலாச்சார மையம் என்று புது பெயர் சூட்டி வணிக வளாகம் கட்டுவதற்காக மைதானத்தை மூடி இருக்கிறார்கள். திட்டப்பணி முடிந்ததும் மைதானம் அப்படியே நீடிக்கும் என்று ஒரு அதிகாரி கூறுவது ஏற்கும்படியாக இல்லை. ஏனென்றால் தமுக்கம் மைதானத்தில் தான் பள்ளம் தோண்டும் பணியை துவங்கி உள்ளனர். பெரியார் பஸ்ஸ்டாண்ட் மறுசீரமைப்பு என்ற பெயரில் தோண்டி கிடக்கும் கதி தான் தமுக்கத்திற்கும் ஏற்படும். கலையரங்கள், கடைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற திட்டங்களை பார்த்தால், தமுக்கம் மைதானத்தையே கட்டிடங்கள் மூழ்கடித்துவிடும். இந்த திட்டம் நிறைவேறினால் தமுக்கத்தை இனிமேல் பார்க்கவே முடியாமல் போய்விடும் என்று அஞ்சுகிறோம். ஏனென்றால் சித்திரை திருவிழா, அரசு சித்திரை பொருட்காட்சி முடியும் வரை கூட காத்திருக்காமல் அவசரகோலத்தில் மூடியதின் மர்மம் என்ன? திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வேறு வசதியான இடமில்லை. சித்திரை பொருட்காட்சியை மாநகராட்சி மாட்டுத்தாவணிக்கு மாற்றி தள்ளுகிறது.

தமுக்கம் மைதானத்தின் முன் பகுதியே கலாச்சார தோற்றத்துடன் தான் காட்சி அளிக்கிறது. இதை அழித்துவிட்டு எந்த புது கலாச்சாரத்தை புகுத்த திட்டமிடுகிறார்கள் என்று புரியவில்லை. நிஜமாகவே கலாச்சார மையம் கட்ட வேண்டுமென்றால், தமுக்கத்தை அழிக்க வேண்டியதில்லை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுக்கும் பூ மார்க்கெட்டுக்கும் நடுவில் 27 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் காலியாக கிடக்கிறது. அங்கு கட்டினால் வரவேற்கலாம்.
இதை மாநகராட்சி பரிசீலித்து மூடிய தமுக்கம் மைதானத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாகும். தமுக்கத்தை அழித்தால், அடுத்து ராஜாஜி பூங்காவிற்கும் இதே கதியே நேரும் என்ற அச்சம் எழுகிறது.  இதன் மூலம் பாரம்பரிய அடையாளம் அழிவதோடு, காந்தி மியூசியத்துக்கு செல்லும் சாலை, வர்த்தக சாலையாகி, பரபரப்பான பகுதியாகும். காந்திமியூசியம் அமைய தேர்வு செய்த இடத்தின் நோக்கமே சிதைவடைந்து போகுமோ? என்று அஞ்ச வேண்டி உள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Tamankam Ground ,Gandhi Museum , The Gandhi Museum
× RELATED மதுரை காந்தி மியூசியத்தில்...