×

கொரோனா தாக்குதல் எதிரொலியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடும் நகரங்கள்

தொண்டி: மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நகரங்கள் மற்றும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், நேற்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீட்டிலேயே முடங்கினர். விடுமுறை என்றாலும் அவர்கள் வெளியில் செல்லும் வகையிலான விளையாட்டரங்கம், தியேட்டர் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், கோவில்கள், மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் ஆள் நடமாட்டமின்றி உள்ளன.

நகர் பகுதிக்குள் உள்ள சாலைகள் உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொரோனா குறித்து பொதுமக்களிடம் மிகப்பெரிய அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதால் இயல்பு நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், சர்ச்சுகளில் வழக்கமாக நடத்தப்படும் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புகழ் பெற்ற கோவில்களில் மக்கள் கூட்டமின்றி காணப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டுகள் பந்த் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் உள்ளது போல் மக்கள் நடமாட்டமின்றி உள்ளன. மேலும் பஸ்களிலும் ஒரு சிலரே பயணிக்கின்றனர். அரசு அலுவலகங்களிலும் மக்கள் வருகை குறைவாகவே உள்ளது. வங்கிகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய இடங்களில் மட்டுமே சிறிது மக்கள் கூட்டம் காணப்படுகிறது. வங்கி அலுவலர்கள் முகத்திற்கு மாஸ்க் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் திடீரென வெகுவாக குறைந்ததால் சிறிய கடைகள் நடத்துபவர்கள், வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் பள்ளிகளுக்கு செல்லும் வகையிலான பஸ்கள், வேன்கள் போக்குவரத்தே அதிகம். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. மக்களும் ஒரு வித அச்ச உணர்வில் பயணங்களை தவிர்த்துள்ளனர். நோய் தாக்கம் குறித்து உண்மையான தகவலை வெளியிட வேண்டும். தற்போது ஏதோ பீதியில் அனைவரும் முடங்கி கிடப்பது தேவையற்றது போல் உள்ளது. இதனால் வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் தேவையற்ற பாதிப்பு ஏற்படும். இதனால் பொருட்களை வாங்கி சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்கும் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். அரசே தேவையற்ற அச்ச உணர்வை கிளப்பாமல் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.

Tags : Cities ,Corona ,attack , Corona
× RELATED தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை...