×

டெல்லி கலவரம் தொடர்பாக போலி செய்திகளை பரப்பிய சமூக வலைதளக் கணக்குகள்..: பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்தது கண்டுபிடிப்பு!

புதுடெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக போலி செய்திகளை பரப்பிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த மாத இறுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது வகுப்புவாதக் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின் காரணமாக ஜப்ராபாத், மஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ் மற்றும் பஜன்புரா ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த கலவரம் குறித்து சமூகவலைத்தளங்களில் போலியான செய்திகள் உலா வந்ததை பாதுகாப்புத்துறையினர் கண்டறிந்தனர். இதுகுறித்து நடத்திய ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி சமூக வலைத்தள கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களில் இருந்து #DelhiRiots2020, #DelhiBurning, #ShameonDelhiPolice, #DelhiPoliceTruth, மற்றும் #DelhiPoliceMurders என்ற பெயரில் செய்திகள் பரவியது தெரிய வந்துள்ளது. இவை தவிர பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் ட்வீட்டுகள் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Discovery ,Pakistan , Delhi, Riot, Fake News, Social Website, Pakistan
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...