×

பெங்களூரு ஹோட்டலில் தங்கியுள்ள காங்., எம்எல்ஏக்களை பார்க்க அனுமதி மறுப்பு: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திக்விஜய் சிங் தடுப்பு காவலில் வைப்பு

பெங்களூரு: சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிடக் கோரி பாஜ முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் தாக்கல் செய்துள்ள மனு இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில்  காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய பிரதேச அரசியல் குழப்பம்:

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் கட்சியில் இருந்து விலகினர். இதனால், கமல்நாத் அரசு  பெரும்பான்மையை இழந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 6 பேர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற 16 எம்எல்ஏ.க்களின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. 6 எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை  தொடர்ந்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 108 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் இணைந்ததால் பாஜ பெரும்பான்மை பலம் பெறும் நிலையில்  உள்ளது.  

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய கவர்னர் லால்ஜி டாண்டன் கடந்த 16ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகர் பிரஜாபதி,  கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி பேரவை கூட்டத்தை மார்ச் 26ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.

பாஜக வழக்கு:

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து, இம்மாநில பாஜ.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், 9 பாஜ எம்எல்ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரவையை வரும் 26ம் தேதி  வரை ஒத்திவைத்த சபாநாயகரின் முடிவு, கவர்னரின் உத்தரவை மீறுவதாக உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகானின் மனுவுக்கு  கமல்நாத் அரசு புதன்கிழமை (இன்று) பதில் அளிக்க வேண்டும். இதற்காக சட்டப்பேரவை செயலாளர், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது,’ என்றனர்.

கொறடா வழக்கு

மத்திய பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடா கோவிந்த் சிங், உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிதாக தாக்கல் செய்துள்ள மனுவில், `கர்நாடகாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை சந்திக்க எங்களை  அனுமதிக்கும்படி மத்திய மற்றும் கர்நாடக மாநில பாஜ அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்கள் கட்சி  எம்எல்ஏ.க்களை தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

திக்விஜய் சிங் தர்ணா:

இந்நிலையில், பெங்களூரில் உள்ள ரமாடா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை பார்த்து பேச மத்திப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேரில் வந்தார். ஆனால், எம்எல்ஏக்களை பார்க்க போலீசார்  அனுமதி மறுத்ததால் திக்விஜய் சிங் தனது ஆதரவாளர்களுடன் ரமாடா ஹோட்டல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திக்விஜய் சிங் பேட்டி:

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும்போது, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரை நாங்கள் கண்டபோது, அவர்கள்  தெரிவித்தார்கள். எம்எல்ஏக்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நான் தனிப்பட்ட முறையில் 5 எம்.எல்.ஏக்களுடன் பேசினேன், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள் என்று சொன்னார்கள், தொலைபேசிகள் பறிக்கப்பட்டன,  முன்னால் போலீஸ் உள்ளது ஒவ்வொரு அறையிலும் அவர்கள் பின்பற்றப்படுகிறார்கள் என்றும் எம்எல்ஏக்கள் தெரிவித்தாக கூறினார்.


Tags : hotel ,Bangalore ,MLAs Dikwijay Singh ,protest , Denial of permission to visit Cong MLAs in Bangalore hotel: Dikwijay Singh involved in Dharna protest
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!