×

ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை எம்பி பதவி: ஜெட்லியின் அறிவுரையைபரிசீலனை செய்தீர்களா? பிரதமருக்கு காங். கேள்வி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இருந்த  ரஞ்சன் கோகாய்,  கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற்றார். இவர், அயோத்தி பிரச்னை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கினார். இந்நிலையில், இவரை மத்திய அரசின் பரிந்துரைப்படி, மாநிலங்களவை நியமன எம்பி.யாக நியமிக்க, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கோகாயை மாநிலங்களவை எம்பி பதவிக்கு பரிந்துரை செய்வதற்கு முன்பாக, பிரதமர் மோடி தனது மறைந்த சட்டம் மற்றும் நிதியமைச்சரான அருண் ஜெட்லியின் அறிவுரையை பரிசீலனை செய்தாரா? நீதிபதி லோகூர் இதனை சரியாக சுருக்கமாக கூறுகிறார்? இந்த சம்பவத்தை அவர், ‘கடைசி கோட்டையானது விழுந்து விட்டதா?’ என கேட்டுள்ளார்,’ என பதிவிட்டுள்ளார். நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு தீர்ப்பாய நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடாது என கடந்த 2012ல் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகும் கூட, இது பற்றி பிரதமர் மோடிக்கு அவர் கடிதங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,

பதவியேற்ற பின் விளக்கமளிப்பதாக கோகாய் பேட்டி
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கவுகாத்தியில் நேற்று அளித்த பேட்டியில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏன் ஏற்றுக் கொண்டேன் என்பது பற்றி பதவியேற்ற பின் விளக்கம் அளிக்கிறேன் என்று கூறினார். இதற்கிடையே, ரஞ்சன் கோகாய்க்கு அவருடன் பணியாற்றிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் குரியன், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்று கொண்டதன் மூலம், நீதித்துறையின் சுதந்திரம் மீதான சாதாரண மனிதனின் நம்பிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி சீர்குலைத்து விட்டார்’ என்றார்.

Tags : Ranjan Gokai ,Jaitley ,Rajya Sabha , Ranjan Gokai, MP for Rajya Sabha, Prime Minister, Congress
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை