×

மக்களவையில் தமிழில் கேள்வி கேட்க அனுமதி மறுப்பது தமிழர்களுக்கு அவமதிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி.க்கள் மாநில மொழியில் கேள்வி கேட்க அனுமதி மறுத்தது, தமிழர்களுக்கு இழைத்த அவமதிப்பு,’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பி.க்கள் அலுவல் மொழி தொடர்பாக துணைக் கேள்விகள் கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குரல் எழுப்பினார். ஆனால், சபாநாயகர் அடுத்த கேள்விக்கு சென்றார். இதை கண்டித்து திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி அளித்த பேட்டி: வங்கிகளின் வராக்கடன், வங்கிகளில் அதிக கடன் பெற்ற முதல் 50 பேர்களின் பட்டியலை அளிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அது தொடர்பாக துணைக் கேள்வி கேட்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சபாநாயகர் தனிப்பட்ட முறையில் என்னை காயப்படுத்தியது பரவாயில்லை.   ஆனால், தமிழ் மொழி குறித்து தமிழக எம்பி.க்கள் அனைவரும் துணைக் கேள்வி எழுப்ப தயாரானார்கள். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தனிநபரை பற்றியது அல்ல. தமிழக மக்கள், தமிழ் மொழி பற்றியது. அதற்கு அனுமதி மறுப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.  ஒவ்வொரு மக்களுக்கும்  தங்களின் தாய் மொழியில் பேசவும், அதை பாதுகாக்கவும் அதன் மீது நம்பிக்கை வைக்கவும் உரிமை உண்டு. சபாநாயகர் ஓம் பிர்லா, எங்களுடைய உரிமைகளை பறிக்கலாம். ஆனால், மக்களவையில் துணைக் கேள்வி கேட்க அனுமதி மறுத்ததன் மூலம் தமிழக மக்களின் உரிமையை பறித்துள்ளார். தமிழக மக்களும், தமிழ் மொழியும் தாக்கப்பட்டுள்ளது.

மக்களவை அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து மொழிகளுக்குமானது. இங்கு விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அண்மை காலமாக இங்கு விவாதங்கள் நடப்பதில்லை. யாரும் கேள்வி கேட்க முடியாது. சபாநாயகர் பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறார். மக்களவை ஒருவழி போக்குவரத்து போன்றதாகி விட்டது. தற்போது வெறும் ஒலி பெருக்கியாகி விட்டது. கொரோனாவை எதிர் கொள்வதற்கு மட்டுமின்றி, அதற்கு அடுத்த 6 மாதங்கள் சந்திக்க இருக்கும் கற்பனைக்கு எட்டாத பொருளாதார பேரழிவையும் எதிர் கொள்வதற்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார். அதற்கு பிறகு, `நாடாளுமன்ற மரபுகள், நடைமுறைகளை மீறி தமிழில் பேச அனுமதி மறுத்தது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று டிவிட்டரிலும் ராகுல் காந்தி பதிவிட்டார்.

சபாநாயகரின்  முடிவு பற்றி கேள்வி கேட்பது முறையல்ல
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ``கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள், பதில்கள் மிக சுருக்கமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான், நிறைய பிரச்னைகள் குறித்து பேச முடியும். ஒவ்வொரு கேள்விக்கும் 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் என்னாவது? பிறகு, 12 மணிக்கு மேல் துணைக் கேள்விகள் அனுமதிக்கப்படுவது இல்லை என்று கூறுவது சரியல்ல. சபாநாயகரின் முடிவுக்கு எதிராக, அவைக்கு வெளியே கேள்வி எழுப்புவது முறையல்ல,’’ என்றார்.



Tags : Rahul Gandhi ,Lok Sabha Lok Sabha ,Tamils , Makkalavaiyi, Tamil, Tamils, Rahul Gandhi
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...