×

தமிழகத்தில் புதிதாக வெடிகுண்டு கலாச்சாரம் உருவாகியுள்ளது: முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்

தமிழகத்தில் புதிதாக வெடிகுண்டு கலாச்சாரம் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதில் அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது:  தமிழகத்தில் புதிதாக வெடிகுண்டு கலாச்சாரம் உருவாகியுள்ளது. ஒரே நாளில் 2 இடங்களில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் திமுகவை சேர்ந்த வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. அதேபோன்று அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்று கலாச்சாரம் தொடருமானால் மிகவும் வருந்தத்தக்கது. இதை முதல்வர், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.  கும்பகோணத்தில் கூட வீடு புகுந்து கொள்ளையர்கள் ஒருவரை அடித்தே சாகடித்துள்ளனர். அவர் மனைவி கையெடுத்து கும்பிட்டதால் விட்டு விட்டனர். வீடு புகுந்து கொள்ளை, வீடுகளின் மீது வெடிகுண்டு வீசுவதை அனுமதிக்க முடியாது. மக்களுக்கு பயம் ஏற்பட்டால் அமைச்சரிடம் கேட்கலாம். ஆனால், அமைச்சருக்கே பிரச்னை என்றால் யாரிடம் கேட்பது?

முதல்வர் எடப்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தங்கவேலு பீடி மண்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 70 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் எரிந்து சேதமைடந்துள்ளது. இந்த பீடி மண்டி வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சகோதரர்கள் அழகிரி, ராவணன் பங்குதாரராக இருந்து நடத்தி வருகின்றனர். கே.சி.காமராஜ் நிர்வாகம் செய்து வருகிறார். இது ஒரு சாதாரண தீ விபத்துதான். ஊடகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக எந்த விதமான புகாரும் பெறப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. ஏதோ இப்போதுதான் இத்தகைய சம்பவம் நடைபெறுவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் கூறுகிறார். உங்களுடைய ஆட்சி காலத்தில் சிவகங்கை நகர்மன்ற தலைவராக இருந்தவர் காரில் செல்லும்போது ரிமோட் குண்டு மூலம் தகர்க்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது, எல்லா ஆட்சியிலும் நடைபெறும் சம்பவம்தான்.

இனி இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். துரைமுருகன்: முதல்வர் எல்லா ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்கிறார். இதுபோன்ற பதில் சரியில்லை. எங்கள் ஆட்சி சரியில்லை என்றுதான் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள். அப்படியும் இதுபோன்ற சம்பவமும் நடைபெறுகிறதே, ஏன்?முதல்வர் எடப்பாடி: சொந்த பகை காரணமாக நடந்த சம்பவம் இது. பேசுகின்ற முறை, தோற்றம் இதை வைத்துதான் நான் அப்படி சொன்னேன். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்காக நாங்கள் விருதுகளை பெற்றுள்ளோம்.

7,500 பள்ளிகளில்  ஸ்மார்ட் கிளாஸ்:
மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா(திமுக): மன்னார்குடி தொகுதியில் பல இடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தேவைப்படுகிறது. பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்:  இந்தாண்டு 1600 உயர்நிலைப்பள்ளி, ேமல்நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி வருகிற போது பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லை என்ற நிலையே தமிழ்நாட்டில் இருக்காது. இந்தாண்டு 7,500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவருவதற்கு முதல்வர் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நிதி வழங்கியிருக்கிறது. அப்படி மத்திய அரசு நிதி வழங்குகின்ற போது உறுப்பினர்கள் குறிப்பிடுகின்ற பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும்.

வெள்ளை ஈக்களை  அழிக்க 5.90 கோடி:
பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): தமிழகத்தில் 9 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம்  செய்யப்படுகிறது. சமீபகாலமாக வெள்ளை ஈக்களால் தென்னை விவசாயம் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளது.  இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு: கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெள்ளை ஈ தாக்கம் உள்ளது. அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக ஈக்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட தென்னை ஓலை மீது வேகமாக தண்ணீரை அடித்தால் இந்த ஈக்களை கட்டுப்படுத்த முடியும். தமிழக அரசும் ₹5.90 கோடி ஒதுக்கி, தென்னை விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பு:
*  தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
*  சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு  தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
*  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் பாதுகாப்பு வசதியினை பலப்படுத்தும் பொருட்டு, விரல் கைரேகை பதிவு, ஜி.பி.எஸ், கண்காணிப்பு கேமரா, ஜாமர் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள்  ஏற்படுத்தப்படும்.
* அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சியாளர் தங்கும் விடுதிகள் ₹2 கோடியில் சீரமைக்கப்படும்.
* அண்ணா மேலாண்மை நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்படும்.

Tags : CM ,Tamil Nadu ,Duraimurugan , Culture , Tamil Nadu, CM, Duraimurugan
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!