×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்: அதிமுக-திமுக விவாதம்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) : தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுக வசதி, 4 வழி சாலை வசதிகள் இருந்தும் இன்னும் தொழில் வளமும் பெருகவில்லை,
அமைச்சர் எம்.சி.சம்பத்: தூத்துக்குடியில் 49,000 கோடி மதிப்பில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைய இருக்கிறது.
அனிதா ராதாகிருஷ்ணன்: குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைய கனிமொழி எம்பி வலியுறுத்தி பேசினார். அதற்கான நிலத்தை கையகப்படுத்தி தர மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இந்த விஷயம் தொடர்பாக, இஸ்ரோ தலைவர் சிவனே என்னை வந்து சந்தித்து பேசினார். அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கியுள்ளது. இது மிகப் பெரிய திட்டம்.
அனிதா ராதாகிருஷ்ணன்: மீன்பிடி படகுகளுக்கு மண்எண்ணெய் எரிபொருளாக வழங்கப்பட்டபோது, மத்திய அரசிடம் இருந்து மீனவர்களுக்கு 80 கோடியை மானியமாக பெற்றுத்தந்தவர் தலைவர் கலைஞர்.   
அமைச்சர் ஜெயக்குமார்: அனிதா ராதாகிருஷ்ணன், கட்டப்பொம்மனை போன்று பேசுகிறார். திமுக ஆட்சியில் மீன் வளத்துறைக்கு 193 கோடிதான் ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் 1,229 கோடி ஒதுக்கப்பட்டது. இதுதான் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் உள்ள  வித்தியாசம்.
அனிதா ராதாகிருஷ்ணன்: அமைச்சர் என்னை கட்டப்பொம்மன் என்கிறார். அவர் என்ன ஊமைத்துரையா?
முதல்வர் பழனிசாமி: மீன்வளத் துறைக்கு அதிமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கியதால், மீனவர்களுக்கு அதிக நன்மை கிடைத்து வருகிறது.  
அமைச்சர் ஜெயக்குமார்: யாருடைய குரலையோ உறுப்பினர் இங்கே பிரதிபலிக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் உங்களுடைய மாவட்டத்திற்கு மீன்வளத்துறை சார்பில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீன்வளத்துறை சார்பில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை சபாநாயகரிடம் தர முடியுமா?.
அனிதா ராதாகிருஷ்ணன்: கடல் சீற்றத்தால் 19 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். அதற்கான நிவாரண வழங்க வேண்டும்.
அமைச்சர் ஜெயக்குமார்: ஒவ்வொரு மீனவர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ₹19,000 வழங்கப்படுகிறது. இது எந்த மாநிலத்திலும் கிடையாது. நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன்: கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் அல்லல்கள் குறித்து எம்ஜிஆர் திரைபடத்தில் பாடலாக பாடுவார்.
அமைச்சர் ஜெயக்குமார்: 2006ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்த போது, இதே பாடலை திமுகவை பார்த்து பாடினார்.
அனிதா ராதாகிருஷ்ணன்: அமைச்சரே, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர் தானே?.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டும், துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானது திமுக ஆட்சியில் தான். ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் ஒரு மீனவர் கூட பாதிக்கப்படாமல் பாதுகாத்த அரசு  அதிமுக தான்.  (அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.)  
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: தென் மாவட்டத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஏன் வரவில்லை என்று தான் கேட்கிறார். ஆனால் அமைச்சர் அடிக்கடி குறுக்கிடுகிறார்.  
அமைச்சர் ஜெயக்குமார்: என்னுடைய குடும்பம் திராவிட குடும்பம். 1949ம் ஆண்டு திமுக ஆரம்பிக்கப்பட்டபோது எனது தந்தை அதில் உறுப்பினராக இருந்தார். அண்ணா விசுவாசி அவர். அப்படிப்பட்ட நிலையில் என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர் என்று அவர் கூறுவதை மறுக்கிறேன்.  
அனிதா ராதாகிருஷ்ணன்:  டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அதை எடுத்தால் சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே வருகிறது. முன்பு அரியலூரில் ரயில் விபத்து நடந்தபோது, அரியலூர் அழகேசா, ஆண்டது போதாதா?. என்று கேள்வி கேட்டார்கள். எனவே, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். முதல்வரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
முதல்வர் பழனிசாமி: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்ததே நாங்கள் தான். தேர்வு மையத்தில்தான் தவறு நடந்துள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார்: இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 50 பேரை கைது செய்துள்ளனர். சரியான முறையில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு இடத்தில் நடந்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக குறை சொல்லக்கூடாது. எங்கு தவறு நடந்ததோ அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Jeyakumar ,DMK ,AIADMK ,Minister Jeyakumar ,TNPSC , TNPSC election, Minister Jayakumar, AIADMK, DMK
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்