×

கால்பந்து பயிற்சியாளர் கார்சியா கொரோனா பாதிப்பால் மரணம்

மாட்ரிட்: ஸ்பெயினை சேர்ந்த 21 வயது கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இறந்துள்ளது விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலாகா நகரை சேர்ந்த அத்லெடிகோ போர்டடா அல்டா கிளப்பின் இளைஞர் அணி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கார்சியா, ஏற்கனவே ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நோயின் தாக்கம் அதிகரித்து இறந்துவிட்டதாக கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கார்சியாவின் மறைவுக்கு கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

*  சென்னையில் நடைபெற்று வந்த ஏ டிவிஷன் வாலிபால் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது  குறித்து சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் நேற்று வெளியிட்ட செய்திக்  குறிப்பு: தமிழக அரசின் உத்தரவு  காரணமாக  சென்னையில்   மார்ச் 19ம் தேதி  முதல் மார்ச் 29ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த  ஏ டிவிஷன் வாலிபால்  லீக் சாம்பியன்ஷிப் போட்டி தள்ளி வைக்கப்படுகிறது. புதிய அட்டவணை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.
*  ஐபிஎல் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், அந்த தொடரில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து அவர்களாகவே முடிவு செய்துகொள்ளலாம். அதில் ஆஸி. கிரிக்கெட் வாரியம் தலையிடாது’ என்று தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார். ஐபிஎல் அணிகளில் மொத்தம் 17 ஆஸி. வீரர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் (அக்டோபர் - நவம்பர்) திட்டமிட்டபடி நடைபெறும் என்று ராபர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐசிசி தரப்பிலும், ‘நிறைய கால அவகாசம் உள்ளதால் உலக கோப்பை டி20 தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யும் அவசியம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*  ஜப்பான் ஒலிம்பிக் நிர்வாகக் குழு துணை தலைவர் கோஸோ டாஷிமா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
*  போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டாவுக்கு சொந்தமான ஓட்டல் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.
*  2020 ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக நார்வே மற்றும் ஸ்வீடன் கால்பந்து சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
*  எனக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை. லேசான காய்ச்சல் தான்’ என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இருந்து கொரோனா காரணமாக வெளியேறிய வெளிநாட்டு வீரர் ஹேல்ஸ் என தகவல் பரவிய நிலையில், அவர் அதை மறுத்துள்ளார்.

Tags : Garcia Corona , Football coach, Garcia Corona, death
× RELATED கால்பந்து பயிற்சியாளர் கார்சியா கொரோனா பாதிப்பால் மரணம்