×

வைரஸ் அறிகுறியை மறைத்து பொது இடத்தில் நடமாடினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை: கேரள அரசு அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் அதை மறைத்து  பொது இடங்களில்  நடமாடினால் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும்.  3  வருடம் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.  கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக  எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மேலும் 3 பேருக்கு உறுதி  செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர் மலப்புரத்தை சேர்ந்த  பெண்கள். ஒருவர் காசர்கோட்டை ேசர்ந்தவர். மலப்புரத்தை  சேர்ந்த 2 பெண்களும் மெக்கா புனித பயணம் சென்று திரும்பியவர்கள்.  காசர்கோட்டை சேர்ந்தவர் துபாயில் இருந்து திரும்பி வந்தவர். 3 பேரும்  காசர்கோடு, மஞ்சேரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா வைரஸ்  பரவி உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களுடன் தொடர்பு வைத்தவர்கள்  கண்டிப்பாக 28 நாட்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிலர் இதை கண்டுகொள்ளாமல் வெளியில்  நடமாடுவது தெரியவந்துள்ளது. இதனால் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ்  பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோல் நோய் அறிகுறி உள்ளவர்கள் அதை மறைத்து  பொது இடங்களில் நடமாட தடை விதிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. மீறி  நடமாடினால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு 3  வருடம் வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அவர்கள்  குணமடைந்து திரும்பிய பின்னர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  இது தொடர்பாக போலீசுக்கு கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி மையம் மீது நடவடிக்கை?
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தான் சித்ரா மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவமனை அமைந்துள்ளது. இதயம் மற்றும் மூளை அறுவை சிகிச்சைக்கு இது பிரசித்தி பெற்றது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு பணி புரியும் டாக்டருக்கு கொரோனா வைரஸ் சமீபத்தில் உறுதியானது. இவர் வீட்டில் கண்காணிப்பில் இருக்க தொடங்கி, 4 நாட்களிலேயே பணிக்கு திரும்பியுள்ளார். இவருடன் மருத்துவமனையில் பணிபுரியம் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகளுக்கும் கொரோனா தாக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட டாக்டரின் விவரங்களை மறைத்து வைத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்ஐவி.க்கு தரும் மருந்து கலவையை வழங்கலாம் சுகாதார அமைச்சகம் பரிந்துரை:
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட இத்தாலியை சேர்ந்த மூத்த தம்பதியருக்கு எச்ஐவி நோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் லோபினாவிர், ரிடோனாவிர் மருந்துகளின் கலவை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவருக்கும் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மருந்தானது பரவலாக எச்ஐவி நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் பரவி வரும் நிலையில், சுகாதார துறை அமைச்சகம், கோவிட்- 19 மருத்துவ மேலாண்மை குறித்த வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளது.  

இதன்படி, எச்ஐவி நோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் லோபினாவிர், ரிடோனாவிர் மருந்துகளின் கலவையை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர்கள் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்டவரின் நோய் தொற்று தீவிரத்தை பொருத்தும், 60 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய், நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்களுக்கும் இந்த மருந்து கலவையை பயன்படுத்தலாம்.  எய்ம்ஸ் மருத்துவர்கள், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் அடங்கிய குழுவானது சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்து கொரோனா நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கலவை பயன்படுத்துவது குறித்து பரிந்துரை செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தவிக்கும் 300 இந்திய மாணவர்கள்:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பரவிய நிலையில் மலேசியாவில் 553 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் நேற்று முதல் முறையாக கொரோனா வைரசுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். மதகுரு ஒருவர் நேற்று கொரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மலேசியாவில் அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அவசரகால அறிவிப்பில், ‘‘மலேசியாவில் மார்ச் 18 முதல் இம்மாதம் 31ம் தேதி வரை தேசிய அளவில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுமையாக இருந்து சவாலைச் சமாளிக்க வேண்டும். மக்கள் பதற்றப்பட வேண்டாம்; அமைதியாக எதிர்க்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே, மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மலேசியாவிலிருந்து இந்தியா திரும்ப காத்திருந்த 300 இந்தியர்கள் மலேசிய விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : govt ,Kerala ,jail ,Kerala Govt ,Public Space , Virus Syndrome, Public Space, Years Jail, Kerala Govt
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...