×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 984 சரிந்தது: 6 மாதத்துக்கு பிறகு 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது: 10 நாளில் 3,200 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 984 சரிந்தது. 6 மாதத்துக்கு பிறகு தங்கம் விலை 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், 10 நாட்களில் 3,200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தங்கம் விலை 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரியில் தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்து, கிராம் 4 ஆயிரத்துக்கு விற்பனையானது. தொடர்ந்து கிராம் 4 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மேலும், ஒவ்ெவாரு நாளும் விலை உயர்ந்து, தங்கம் விலை வரலாற்று சாதனையை படைத்து வந்தது. கடந்த 6ம் தேதி ஒரு சவரன் 33,760க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது, நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வந்தது. விலை உயர்வால்  விசேஷங்களுக்கு நகை வாங்குவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அதன்பின்னர் தங்கம் விலை சிறிது குறைவதும், அதிகரிப்பதுமான போக்கு காணப்பட்டது.

கடந்த 7ம் தேதி ஒரு சவரன் 33,656, 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 9ம் தேதி ஒரு சவரன் 33,488, 10ம் தேதி 33,712, 11ம் தேதி 33,312, 12ம் தேதி 33,256, 13ம் தேதி 32,104, 14ம் தேதி 31,472க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 3,943க்கும், சவரன் 31,544க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக குறைந்தது. அதாவது, கிராமுக்கு 123 குறைந்து ஒரு கிராம் 3,820க்கும், சவரனுக்கு 984 குறைந்து ஒரு சவரன் 30,560க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் சுமார் 1000 அளவுக்கு குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை 10 நாட்களில் மட்டும் சவரன் சுமார் 3,200 அளவுக்கு குறைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல நாடுகளுடைய போக்குவரத்து தொடர்புகள் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால், பங்குச்சந்தையில் வர்த்தகம் முழுவதுமாக தடைபட்டுள்ளது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவில் மத்திய பெடரல் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களிடம் ஒரு கலக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த இரண்டு காரணங்களுக்காக தங்கம் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.  இதுக்குமேல் குறையாது. இதுவே அப்படியே ஓடிக்கொண்டிருக்கும். இருப்பினும் இந்த மாதம் இறுதிக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. 6 மாதத்துக்கு பின்னர் தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Action change ,jewelry buyers , Gold prices, collapsed, happiness
× RELATED காங்கிரசில் இருந்து விலகி வந்த அனில்...