×

மெட்ரோ ரயில் பணியின்போது பூமியில் புதைந்தது டீக்கடை: தண்டையார்பேட்டையில் பரபரப்பு

சென்னை: தண்டையார்பேட்டையில் பூமிக்கடியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்தபோது ஏற்பட்ட அதிர்வில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது. அப்போது பூமியின் மேலிருந்த  டீக்கடை அந்த பள்ளத்தில் புதைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை கடந்த 3 ஆண்டுகளாக மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டையார்பேட்டை வரை பூமிக்கடியில் தண்டவாளம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி காரணமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில், தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகே பூமிக்கடியில் மெட்ரோ ரயிலுக்கு தண்டவாளம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பூமியில் அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள திருவொற்றியூரை சேர்ந்த சுனில்குமார் (36) என்பவர் டீக்கடை குலுங்கியது. பயந்துபோன ஊழியர்கள் கடையில் இருந்து அலறிக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். சற்று நேரத்தில் டீக்கடையின் மேல்கூரை உடைந்து சுமார் 4 அடிக்கு பூமியில் புதைந்தது. சரியான நேரத்தில் ஊழியர்கள் வெளியே ஓடிவந்து விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதனிடையே மெட்ரோ ரயில்வே அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடத்தப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், டீக்கடை பூமிக்குள் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மண் பரிசோதனை மற்றும் முறையான சோதனைக்கு பிறகே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags : Tekkady ,earth ,train ,Metro , Metro train, buried, decked, deodarpet, thrilling
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...