×

குடியுரிமை திருத்த மசோதா போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவது குற்றம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி, கண்ணன் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் வாதிடும்போது, காவல்துறை அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் போராடி வருவதாக குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தான் சரியாக இருக்குமே தவிர, இதுபோன்ற போராட்டம் நடத்துவதை சட்டவிரோதமாக தான் கருத வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சிறார் நீதி   சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதன்படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், ₹5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டப் பிரிவின்கீழ்  காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றார். அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், போராட்டங்கள் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : children ,fight ,Struggle ,Highcourt , Citizenship, Struggle, Report,highcourt , Order
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்