×

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி உயரும்: வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி உயரும் என்பதால், வணிக வளாகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தமிழக முதல்வர் எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழக அரசு எடுக்கும் மக்கள் நல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், இயற்கை பேரிடர் காலங்களிலும் சரி, சுகாதார நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும், மலேரியா, நிமோனியா, டெங்கு விழிப்புணர்வு முகாம்களிலும் முன்னிலையில் நின்று அரசோடு தோள் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு வணிக வளாகங்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதித்திருப்பதை வரவேற்றாலும், அதனால், ஏற்படும் பின்விளைவுகளை அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மக்களிடம் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, வணிக முடக்கம், பொருட்கள் தட்டுப்பாடுகளால் விலைவாசி உயர்வும் ஏற்படுவதோடு பொருளாதார பின்னடைவை நிச்சயம் ஏற்படுத்தி அரசின் வருவாய் இழப்போடு, வணிகர்களின் வாழ்வாதாரம், பணியாட்களின் தேவைகள், வேலை செய்வோருக்கான ஊதிய விநியோகத்தில் இடர்பாடுகள் போன்றவற்றால் மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அரசுக்கும், அவப்பெயரை உருவாக்கி விடும் என்பதை கருத்தில் கொண்டு, அத்தியாவசியமான வணிக வளாகங்களை சிறிய விழிப்புணர்வு, சுகாதார மேம்பாட்டுக்கு ஏற்பாடு, கிருமி நாசினி தெளிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வணிகம் தொடர்ந்திட அரசு ஒத்துழைப்பு நல்கி அனைத்து மக்களும் கொரோனாவை விழிப்புடன் எதிர்கொள்ள தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அன்புடன் வேண்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vikramramaja ,government ,Tamil Nadu ,vikramaraja , Business premises, vikramaraja, plea
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...