×

போலி டாக்டர்கள் மீது வழக்கு பதிய மறுத்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: போலி டாக்டர் தம்பதி மீது வழக்கு பதிவு செய்ய மறுத்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்தவர் மதியழகன். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பேராவூரணியில் போலி மருத்துவர்களாக செயல்படும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேராவூரணி இன்ஸ்பெக்டரிடம் கடந்த 2018ம் ஆண்டு புகார் அளித்தேன். ஆனால், அவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரால் போலி மருத்துவர்கள் என புகாரில் கூறப்பட்ட தம்பதி மாற்று மருத்துவம் படித்து மருத்துவ சிகிச்சை அளிக்க உரிய அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஏற்பட்ட விரோதம் காரணமாக மனுதாரர் அந்த தம்பதி மீது புகார் அளித்துள்ளார். எனவே லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் கூறுவது தவறானது என்று இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில் போலீஸ் சூப்பிரண்டு அறிக்கையில், கிளினிக்கை முடியதாகவும், போலி டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார். எனவே போலீஸ் சூப்பிரண்டு அறிக்கையை பார்க்கும்போது, இன்ஸ்பெக்டர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதும், ஆணையத்தில் சில விஷயங்களை மறைத்ததும் தெரியவந்துள்ளது. எனவே, இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனனுக் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Inspector ,doctors , Fake Doctors, Case, Inspector, Penalties, Human Rights Commission
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு