×

தேனி மாவட்டத்தில் அதல பாதாளத்திற்கு சென்ற நீர்மட்டம்: தோட்டக்கலை பயிர்களுக்கு கூட தண்ணீர் இல்லை

தேனி: தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறைந்திருப்பதால் காய்கறி சாகுபடி செய்யக்கூட போதிய தண்ணீர் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் கண்மாய்கள் நிரம்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு பெய்த மழையில் கூட 15 சதவீத கண்மாய்களில் மட்டுமே தண்ணீர் ஓரளவு இருந்தது. மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. மாவட்டத்தில் 50 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் தோட்டக்கலை சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள கிணறுகள் முற்றிலும் வறண்டுள்ள நிலையில், போர்வெல்களிலும் நீர்மட்டம் சரிந்துள்ளது. மாவட்டத்தின் சராசரி நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது.

தற்போது தோட்டக்கலை பயிர்களுக்கு நீர் பாய்ச்ச தேவையான நிலத்தடி நீர் எங்குமே கிடைக்கவில்லை. ஓரிரு போர்வெல்கள் மட்டுமே ஒரு மணி நேரம் இயங்குகின்றன. பல நுாறு போர்வெல்கள் அரைமணி நேரம் கூட இயங்கவில்லை. தற்போது காய்கறி வரத்து அதிகம் உள்ளதால், இதன் பாதிப்பு தெரியவில்லை. விரைவில் காய்கறி விளைச்சல் குறைந்ததன் பாதிப்பு தெரியவரும். மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையில் தலையிட்டு போர்க்கால நடவடிக்கை எடுத்து, காய்கறி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags : Theni , Theni, water level, horticultural crop
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...