×

அருப்புக்கோட்டை அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் பாலையம்பட்டி கிழக்குத் தெரு; அதிகாரிகள் வேடிக்கை; மக்கள் அவதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிழக்குத் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாலையம்பட்டி கிராம ஊராட்சி. இங்குள்ள கிழக்குத்தெருவில் 16 தெருக்கள் உள்ளது.  500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருக்களில் வாறுகால் முறையாக தூர் வாரப்படவில்லை. துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. வாறுகால்  துப்புரவு செய்ய வருவதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. சுகாதாரக்கேடாக உள்ளதால் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இங்குள்ள தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக கிடப்பதால் நடந்து செல்ல முடியவில்லை. தாமிரபரணி குடிநீர், வைகை குடிநீர் இருந்தும் இப்பகுதிக்கு முறையாக வழங்குவதில்லை.  தாமிரபரணி குடிநீரும் 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாலும், போதுமான பொது குழாய்கள் இல்லாததாலும், வீடுகள் அதிகம் இருப்பதால் தண்ணீர் வரும்போது ஒரு வீட்டிற்கு 10 குடத்திற்கு மேல் பிடிக்க முடியவில்லை. குடிநீர் போதுமானதாக இல்லை என இப்பகுதி பெண்கள் புலம்புகின்றனர்.

குடிநீர் மேல்நிலை தொட்டி முன்பு உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை. பகிர்மான குழாய்கள் சேதமடைந்து விட்டதாலும், நகராட்சிக்கு செலுத்தவேண்டிய குடிநீர் கட்டணம் முறையாக செலுத்தப்படாததாலும், குடிநீர் பொது குழாய் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் காட்சிப்பொருளாக உள்ளது. குடிநீர் குழாய் அருகில் குப்பைத்தொட்டியை வைத்து குப்பையை கொட்டுகின்றனர்.  இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. பொதுக்குழாயில் குடிநீர் வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள செவல் கண்மாயில் கழிவுநீர் மட்டுமே நிரம்பி உள்ளது.

கண்மாயில் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும்போது குளிப்பதற்கும், துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது கழிவுநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கண்மாய் உள்ளது. எனவே கழிவுநீர் கண்மாயில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கழிவறை வசதி இல்லை. பட்டத்தரசியம்மன் கோவில் பின்புறம் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் உள்ளது. மேலும் கழிவறையை மறைத்து குப்பை கொட்டும் இடமாக மாற்றி விட்டனர். லட்சக்கணக்கில் செலவழித்து கழிவறை கட்டியும் பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது.

எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பாலையம்பட்டி கிழக்குத்தெரு பகுதிக்கு குடிநீர்வசதி, வாறுகால் வசதி, சாலை வசதி, செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வளர்மதி கூறுகையில்,‘‘ தெருக்களில் வாறுகால் முறையாக தூர்வாரப்படவில்லை. சாக்கடை தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்துகிறது. வாரம் ஒருமுறையாவது வாறுகாலை தூர்வாரி கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்,’’என்றார்.
முருகன் என்பவர் கூறுகையில்,‘‘ செவல்கண்மாயில் தான் கிராமத்தின் கழிவுகள் அனைத்து சேருகிறது.

மழை பெய்து கண்மாய் நிறைந்தாலும் பலன் இல்லை. பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. கண்மாயில் கழிவுகளை வராமல் தடுத்து மீண்டும் கண்மாயினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,’’என்றார்.

Tags : Palayampatti East Street ,Aruppukkottai , Aruppukkottai, Palayampatti East Street
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்