×

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். நாள் ஒன்றுக்கு 1500 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கில் ஒரு வழக்கறிஞர் மட்டுமே ஆஜராக வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே மனுதாரர் ஆஜராக வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முதலே வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், தலைமை நீதிபதியை சந்தித்து உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி மற்றும் மூத்த நிர்வாகிகள் அடங்கிய, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வருகின்ற 3 வாரங்களுக்கு அவசர வழக்குகளை மட்டுமே விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. நாள் ஒன்றுக்கு 1500 வழக்குகள் என்றும், தினமும் ஒரு நீதிபதிக்குக்கு தலா 50 வழக்குகள் ஒதுக்கப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்கும் முடிவு 3 வாரங்கள் மட்டுமே அமலில் இருக்கும். அதாவது இறுதி வழக்குகள் விசாரிக்கப்பட மாட்டாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இத்தகைய முடிவு எடுத்துள்ளது. அதேபோல் தெலுங்கானா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திலும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் சமரச மையமும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madras HC ,Chief Justice , Madras High Court, Emergency, Hearing, Chief Justice
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...