குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் நுழைய முயன்ற 14 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு: வனத்துறையினர் நடவடிக்கை

குடியாத்தம்: குடியாத்தம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த யானைகளை விரட்டுவதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து யானைகளை விரட்டும் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அந்த 14 யானைகள் குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அருகே உள்ள குடிம்பிபட்டி கிராமத்திற்கு வந்த யானைக்கூட்டம் அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைய முயன்றது.

அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த  வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இருப்பினும் இந்த யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் ஆந்திர வனப்பகுதியிலிருந்து குடியாத்தம் வனப்பகுதிக்கு அடிக்கடி வருவதால் அப்பகுதிமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், இந்த யானைகளை நிரந்தரமாக ஆந்திர வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். மீண்டும் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>