×

கொரோனா பீதி எதிரொலி: கரூரில் ஜவுளி உற்பத்தி சரக்குகள் முடக்கம்...வியாபாரிகள் கவலை

கரூர்: கொரோனா பீதி எதிரொலியாக கரூரில் ஜவுளி உற்பத்தி சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படாமல் முடங்கிப்போய் இருப்பதால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் ஜெர்மன் நாட்டில் பிராங்க்பர்ட்டில் நடைபெறும் ஜவுளி கண்காட்சிக்கு ஜனவரி மாதம் சென்று வருகின்றனர். அங்கு ஆர்டர்களை பெறுவதற்காக ஸ்டால்களை அமைத்து வீட்டுஉபயோக ஜவுளிகளின் மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.
ஆண்டுதோறும் நமது நாட்டிற்குபோட்டியாக சீனா விளங்கிக்கொண்டிருந்தது. இந்த ஆண்டு ஜெர்மன் கண்காட்சி நடைபெற்றபோது சீனாவில் கொரோனா தாக்குதல் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. எனினும் அதன் பின்னர் அந்நாட்டில் கொரோனா கிருமிகள் அதிகம் பரவியதை தொடர்ந்து வீட்டுஉபயோக ஜவுளிகளை வாங்குவோர் அங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு அளித்திருந்த ஆர்டர்களை திரும்பபெற்றனர்.

கண்காட்சியின்போது வழக்கமான ஆர்டர்களை பெற்றுத்திரும்பினர். எனினும் கொரோனோ தாக்குதலுக்கு பின்னர் அதிக அளவில் நமது நாட்டை சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. சீனாவுக்கு போட்டியாக திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், சமையல் அறையில் பயன்படுத்தும் ஏப்ரான்கள், கால் மிதியடிகள், கையுறை, கைக்குட்டை, தலையணை போன்ற வீட்டுஉபயோக ஜவுளிகளை கரூர் ஏற்றுமதியாளர்கள் தயாரித்து வருகின்றனர். எனினும் கரூர் மாவட்டத்தை பொறுத்த அளவில் சிறுகுறு உற்பத்தியாளர்களுக்கு பிற மாவட்டத்தை ஒப்பிடுகையில் மத்திய, மாநில அரசுகள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சாயப்பூங்கா அமைக்கும் திட்டத்தை கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டனர். ஜவுளிப் பூங்காவும் கிடையாது. நூல்விலை கட்டுப்பாட்டில் இல்லை. குறைந்தபட்சம் 3 மாதத்திற்காவது நூல்விலையை சீராக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட மாநில அரசு நிறைவேற்றவில்லை. மேலும் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அமலுக்கு பின்னர் ஜளித்தொழில் பல்வேறு சரிவை சந்தித்து வருகிறது. ஜிஎஸ்டி ரிட்டர் தொகை கிடைக்க காலதாமதம் ஆவதால் முதலீடு இன்றி ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர்.

இவ்ளவு பிரச்சனைகளையும் சமாளித்து ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி அளவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் கரூர் ஜவுளித்தொழில் கொரோனா தாக்குதல் காரணமாக விமானம், கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்தால் மேலும் முடங்கிப்போய் உள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, பின்லாந்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்குதலால் வர்த்தகம் முடக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் கொரோனா தாக்குதலால் ஆர்டர்கள் அதிகம் வருகிறது அதனை ஊக்குவிக்கும் வகையில் உதவிசெய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு 2 மாதத்திற்கு முன்னர் கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளப்படவில்லை. தற்போது உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளையும் ஏற்றுமதி செய்யாமல் முடக்கம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி முடக்கத்தினால் தொழிலாளர்கள்அடுத்து வேலை வாய்ப்பினை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டீபன்பாபு கூறியது: இந்த ஆண்டு ஜெர்மனில் கண்காட்சி நடைபெற்ற போது சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது.

இந்த விவகாரத்தினால் வழக்கத்தை விட அதிகமாக ஒருவருக்கு சுமார் ரூ.400 கோடி வரை சராசரியாக ஆர்டர்கள் கிடைத்தன. பெற்ற ஆர்டர்களில் 75 சதவீத ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யும் நிலையில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு துண்டிக்கப்பட்டுள்ளது, அந்தந்த நாடுகளை சென்றடைந்த சரக்குகளும் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு டெலிவரி ஆகாமல் இருக்கின்றன. ஏற்றுமதியான சரக்குகள் டெலிவரி ஆனால் தான் சரக்குகள் உற்பத்திய செய்ய முடியும். பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி விட்டன. இதனால் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஜவுளி உற்பத்தியின் உபதொழில்களான சாயம் சலவை, தையல், மதிப்புக்கூட்டுதல் போன்றவை நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கொரோனா பிரச்சினை தீர்ந்து இறக்குமதி வழக்கம்போல நடைபெற்றால் மட்டுமே தொழில் வழக்கம்போல செயல்படும் என்றார்.

Tags : Corona Panic Echoes ,merchants ,Karur ,Corona Panic Echoes: Textile Manufacturing Goods Freeze , Corona, Karur, Textile Manufacturers, Traders
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...