×

முத்துப்பேட்டை அருகே கோட்டகத்தில் தற்காலிக மரப்பாலத்தில் தள்ளாடும் விவசாயிகள்: நிரந்தர கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த கோட்டகத்தில் தற்காலிக மரப்பாலத்தில் அச்சத்துடன் செல்லும் விவசாயிகள் நலன்கருதி, கான்கிரீட் பாலம் அமைத்த தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அயிரக்கண்ணி அருகே அடுத்தடுத்து ஆலங்காடு மற்றும் கோவிலூர் விவசாய நிலமான சாகுபடி கோட்டகம் உள்ளது. இதில் ஆலங்காடு கோட்டகத்தில் சுமார் 120 ஹெக்டேரும், கோவிலூர் கோட்டகத்தில் சுமார் 135ஹெக்டேரும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த சாகுபடி கோட்டகதிற்கும் அயிரக்கண்ணி பகுதிக்கும் இடையில் கோவிலூர் வடிகால் பாசன வாய்க்கால் ஒன்று உள்ளது. இதில் கிழக்கே கோரையாற்றிலும், மேற்கே பாமணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து பெற்று இந்த வாய்க்கால் மூலம் கிளை வாய்க்கால்கள் பிரிந்து இப்பகுதி விவசாய நிலங்களின் பாசனத்திற்கு தண்ணீர் சென்று அடைகிறது. இதன் குறுக்கே தற்பொழுது தற்காலிக மரப்பாலம் ஒன்று உள்ளது.

இது இப்பகுதி கோட்டகதிற்கு செல்லும் விவசாயிகள் மற்றும் கோடகத்தை கடந்து செறுப்பட்டாக்கரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தற்காலிக மரப்பாலம் அன்று முதல் இன்று வரை அடிக்கடி உடைந்து சேதமடையும். அதனை அப்பகுதி மக்களே சரி செய்வார்கள். பாமணி ஆற்றில் தண்ணீர் வரும்போது தலையில் பாரம் சுமந்து செல்லும் விவசாயிகள், பாலத்தில் பக்கவாட்டு கைப்பிடி ஏதும் இல்லாததால் தள்ளாடியபடி அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். தடுமாறி விழுந்தால் ஆற்றில்தான் விழு வேண்டும்.எனவே பொதுமக்கள் நலன் கருதி, இந்த தற்காலிக மரப்பாலத்தை அகற்றி விட்டு புதிய கான்கிரீட் சிமெண்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.

இந்தநிலையில் தற்பொழுதும் அந்த மரப்பாலம் ஆங்காங்கே மரப்பலகை சேதமாகியுள்ளன. விவசாயிகள் நடக்கமுடியாத ஆபத்தான நிலையில் உள்ளது. சிலர் அந்த பாலத்தின் செல்லும்போது தவறி பலகையின் இடையில் கால்களை விட்டு காயப்பட்டு வருகின்றனர். சிலர் எதற்கு வம்பு என்று தண்ணீரில் இல்லாத நேரத்தில் வற்றிப்போன ஆற்றில் நடந்து செல்கின்றனர். குறைந்த தண்ணீர் இருக்கும்போது இடுப்பளவு தண்ணீரில் நீந்தவாறு இந்த வாய்க்காலை கடந்து செல்கிறனர். தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் நேரத்தில் அதுவும் செல்லமுடியாது. அதேநேரத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான பொருட்களை விவசாயிகள் கொண்டு செல்லும்போது மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதனால் அரசு இனியும் காலதாமதப்படுத்தாமல் இந்த தற்காலிக மரப்பாலத்தை அகற்றிவிட்டு நிரந்தரமான சிமென்ட் கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும். என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி கூறுகையில்: நீண்ட பல வருடங்களாக இந்த மரப்பாலத்தை அகற்றிவிட்டு நிரந்தர புதிய சிமெண்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம் ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நலன்கருதி இதற்கு அதிகாரிகள் உடன் நிதி ஒதுக்கீடு செய்து இந்த சிமெண்ட் கான்கிரீட் பாலமாக கட்டி ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags : bridge ,concrete bridge ,Muttupettu ,Kottayam ,Kottakkam , Farmers pushing ,temporary wooden bridge ,Muttupettu near Kottakkam,building permanent,concrete bridge
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...