×

ம.பி. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு: பாஜக மனுவை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்களாக இருந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள்  பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்த, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு  பிறப்பித்திருந்தார். நேற்று தொடங்கிய மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஆளுநர் லால்ஜி டாண்டன் தனது  வழக்கமான உரையை வாசித்தார். 2 நிமிடங்களுக்குள் தனது உரையை முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சட்டப்பேரவையை வரும் 26ம் தேதிவரை ஒத்திவைப்பதாக சபாநயகர் பிரஜாபதி அறிவித்தார். இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். முதல்வர்  கமல்நாத் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது. அது ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை. ஆளுநர் உத்தரவுப்படி நம்பிக்கை  வாக்கெடுப்பை உடனடியாக நடத்த ம.பி சபாநாயகர், முதல்வர் மற்றும் சட்டப்பேரவை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 9 பா.ஜ எம்.எல்.ஏ.க்கள் இணைந்து உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும்  எனக்கூறி ஒத்திவைத்தது. நாளை உச்சநீதிமன்றம் மனுவை விசாரித்தப்பின் மத்தியப் பிரேதச சட்டப்பேரவையையில் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெறுமா? இல்லையா? என்று தெரியவரும். 


Tags : Madhya Pradesh Supreme Court ,BJP ,plea hearing , Madhya Pradesh Supreme Court adjourns BJP plea hearing tomorrow
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...