×

கறிக்கோழி கொள்முதல், விற்பனை வீழ்ச்சி எதிரொலி: கறிக்கோழி தீவனம் மக்காச்சோளம் விலை சரிவு..விவசாயிகள் வேதனை

பல்லடம்: கறிக்கோழிகளின் முக்கிய தீவனமான மக்காச்சோளம் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் கடைக்கு செல்லவில்லை. இதனால் இறைச்சிக் கடைக்காரர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வந்தனர். இதனால், கறிக்கோழி கொள்முதல் மற்றும் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக கறிக்கோழிகளின் முக்கிய தீவனமான மக்காச்சோளம் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கறிக்கோழி தீவமான மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு 1,800 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனையானது.

ஆனால், தற்போது ஒரு குவிண்டால் 1,300 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 25 குவின்டால் மக்காச்சோளம் விளைச்சல் கிடைக்கும். இதற்கு மருந்துடன் சேர்த்து சுமார் ரூ.60,000 செலவாகிறது. ஆனால் தற்போது விலை சரிவு காரணமாக விவசாயிக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.40,000 நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட பெரும்பாலான விவசாயிகள் 40 சதவீதம் விளைச்சலை இருப்பு வைத்துள்ளனர். எனவே, கறிக்கோழிகளால் கொரோனா வைரஸ் பரவவில்லை என்று தமிழக அரசும், கறிக்கோழி உரிமையாளர்களும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பல்லடம் விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : purchase ,The Corn Fodder ,Maize , chicken, Corona virus, maize, farmers
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு