×

கோடை காலத்தையொட்டி ஆம்பூர் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் சீரமைப்பு

ஆம்பூர்: கோடை காலத்தையொட்டி ஆம்பூர் அருகே வனப்பகுதிகளில் உள்ள பழுதான தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வன சரகங்களில் ஆம்பூர் வனச்சரகம் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. ஆம்பூர் வனச்சரகத்தில் சாணாங்குப்பம், துருகம், ஊட்டல், பல்லலகுப்பம் ஆகிய காப்பு காடுகள் உள்ளன. இவற்றில் மான், சிறுத்தை, யானை, மலைபாம்பு, காட்டுபன்றிகள், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் இந்த வன உயிரினங்கள் தங்களது தண்ணீர் தேவைக்காக காடுகளை சுற்றி வருகின்றன. அங்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில் இவைகள் அருகில் உள்ள விவசாய நிலங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை நாடி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வன விலங்குகளை தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியேறா வண்ணம் அவற்றை தடுக்க வனப்பகுதிகளில் தமிழக வனத்துறை சார்பில் பல்வேறு நீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகளை அங்கு வசிக்கும் மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் நாடி வந்து தங்களது தாகத்தை தீர்த்து வந்தன. ஆனால், சமூக விரோதிகளால் இந்த தண்ணீர் தொட்டிகள் சேதப்படுத்தப்பட்டு நீர் பிடிக்க இயலாத நிலையில் இருந்து வருகின்றன.
தற்போது வனத்துறையினர் இந்த தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்து நீர் நிரப்பி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தொட்டிகள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளன. தற்போது ஊட்டல் காப்பு காட்டில் உள்ள  தூருசந்து, ஜவ்வூட்டல், தேன்கல் கானாறு ஆகிய பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்பூர் வனச்சரகர் மூர்த்தி,  வனவர் சம்பத், வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், ஞானவேல் ஆகியோர் இப்பணியை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வனச்சரகர் மூர்த்தி கூறுகையில், ‘இனிவரும் கோடைகாலங்களில் தண்ணீர் தேடி வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளையும் தேடி வரும் சூழல் உள்ளது. எனவே ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளையும், மான் தொட்டிகளையும் வனவிலங்குகள் ஆர்வலர்கள் உதவியுடன் சீரமைத்து வருகிறோம். இந்த தொட்டிகளில் எந்நேரமும் தண்ணீர் தேக்கி வைக்கும்  ஏற்பாடுகளை இப்போது செய்து வருகிறோம்’ என்றார்.

Tags : forest ,Ambur , Renovation, water tanks ,Ambur forest,summer
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...