×

குளத்தூர் அருகே 2 இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கண்மாய் தண்ணீரை குடிப்பதால் மக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு

குளத்தூர்: குளத்தூர் அருகே 2 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கண்மாய் தண்ணீரை குடிப்பதால் பல்வேறு தொற்று நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குளத்தூர் அருகே உள்ள முள்ளூர் பஞ்சாயத்திற்குட்பட்டது முத்துக்குமாரபுரம். இந்த கிராமத்தில் 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்லைன் மூலம், முத்துக்குமாரபுரத்தில் அமைக்கப்பட்டு உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் நிரப்பப்படும். அதிலிருந்து இப்பகுதி மக்கள், வாளிகள் மூலம் இறைத்து வீடுகளுக்கு எடுத்து சென்று பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை உடைப்புகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள், குடிநீருக்காக கண்மாயில் உள்ள கிணற்று நீரை இறைத்து வடிகட்டி உபயோகித்து வருகின்றனர். இந்த தண்ணீரை குடிப்பதால் இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுநோய்க்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் விற்கப்படும் குடிநீரை குடம் ரூ.10 என விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் கிராம மக்களின் அன்றாட தேவைகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குறுக்குச்சாலை ஜம்ப்பில் இருந்து குளத்தூர் வழியாக செல்லும் பைப் லைனில் முத்துக்குமாரபுரம் கிராமத்திற்கு குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இரு வாரங்களுக்கு முன்பு 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் முறையாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். கண்மாய் நீரை பருகுவதால் தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளோம். எனவே உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குழாய் உடைப்பை சரிசெய்து விரைந்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : places ,Kulathoor Klathoor , Kolathur, pipe, drinking water, epidemic
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...